டெல்லியில் அதிகரித்த காற்று மாசு!

டெல்லியின் அண்டை மாநிலங்களின் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.)6 வகைகளாக தரம் பிரிக்கப்படுகிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 – 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 – 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல்நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும்.

301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும். இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. தீபாவளி தொடர் விடுமுறையால் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து – தலைநகர் டெல்லியில் காற்று மாசடைந்து காற்றின் தரக்குறியீடு 262 ஆக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இது மக்களின் உடல் நலனுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு நாட்கள் உள்ளன. இதையொட்டி உ.பி. – டெல்லி பகுதிகளில் வசிக்கும் வெளியூர் நபர்கள், தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாட முன்கூட்டியே தங்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் புறப்பட்டனர். இதையொட்டி டெல்லி- குர்கான் இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் வரிசை கட்டி வந்த வாகனங்களால் சர்ஹாவுல் டோல்பிளாசா அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் அறிவித்துள்ளார். பட்டாசு தயாரித்தல், வைத்தல், விற்றால் ரூ.5,000 வரை அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசு தடையை அமல்படுத்த 408 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!