ஜனாதிபதியை பசில் உட்பட பலர் அச்சுறுத்தும் நிலை! கடும் அழுத்தங்களை கொடுக்க தயாராகி வரும் மகிந்த

மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினருக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் தீர்மானகரமான அழுத்தங்களை கொடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தெரியவருகிறது.

அழுத்தங்களுக்கு அடிப்பணிவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி 

ஜனாதிபதி தனது எகிப்து விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் உடனடியாக இந்த சந்திப்பு நடக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அழுத்தங்களுக்கு அடிப்பணிந்து வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதில்லை என்பது ஜனாதிபதியின் நிலைப்படாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகளுக்காக 12 பேர் அடங்கிய பட்டியலை ஜனாதிபதியிடம் வழங்கியிருந்தார். அந்த பட்டியலில் நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன, சனத் நிஷாந்த போன்ற தற்போது மக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளானவர்களின் பெயர்கள் இருந்தன.

இந்த நிலையில், பட்டியலில் உள்ள மக்கள் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரை தவிர ஏனையோருக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு பொதுஜன பெரமுவின் குழுவொன்று ஜனாதிபதியிடம் தொடர்ந்தும கோரிக்கை விடுத்து வந்துள்ளதாக பேசப்படுகிறது.

இந்த நிலைமையில், அமைச்சரவையை நியமிப்பது தொடர்பான உள் நெருக்கடி தீவிரமடைந்ததுடன் ஜனாதிபதியை பசில் ராஜபக் உட்பட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அச்சுறுத்தும் நிலைமை ஏற்பட்டது.

தீவிர நிலைப்பாட்டில் இருக்கும் மகிந்த மற்றும் பசில் 

எனினும் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சனத் நிஷாந்த ஆகியோருக்கு அமைச்சு பதவிகளை வழங்க வேண்டும் என்ற தீவிரமான நிலைப்பாட்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடியை தீர்க்க, ஜனாதிபதியின் எகிப்து விஜயத்தின் பின்னர், வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சிறப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தெரியவருகிறது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!