மாவீரர் துயிலும் இல்லங்களில் இருந்து படையினர் உடன் வெளியேற வேண்டும்: கஜேந்திரன் வலியுறுத்து

“வடக்கு, கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன எனவும் அங்கிருந்து இராணுவத்தினர் உடனடியாக வெளியேறி அந்த இடங்களின் புதிதத்தைப் பேணுவதற்கு இடமளிக்க வேண்டும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே கஜேந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இந்த மாதம் தமிழர்களைப் பொறுத்தவரை முக்கியமான மாதமாக உள்ளது. இந்தத் தீவின் ஆட்சி அதிகாரத்தைப் பிரித்தானியர்களிடம் இருந்து 1948 ஆம் ஆண்டில் சிங்களப் பேரினவாதம் பெற்றுக்கொண்ட பின்னர் தமிழருக்கு எதிரான இனப்படுகொலைகள் திட்டமிட்ட ரீதியில் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
இன கலவரங்கள் 

1977, 1983 மற்றும் 1987 கலவரங்கள் என்று படுகொலைகள் இடம்பெற்ற நிலையில், அதில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காகத் தமிழினம் ஆயுதமேந்திப் போராடியது. அவ்வாறான ஆயுதப் போராட்டம் 37 ஆண்டுகள் நடந்துள்ளன. இந்த விடுதலைப் போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் தங்களின் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களை நினைவு கூரும் மாதத்தில் நாங்கள் நிற்கின்றோம். இந்நிலையில் எங்களுக்காக உயிர்நீத்த அந்த மாவீரர்களுக்காக ஒரு கணம் தலை சாய்த்துக்கொள்கின்றேன். 
இந்த இடத்தில் ஜனாதிபதி இருப்பதால் சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

மாவீரர் துயிலும் இல்லங்கள்

நாங்கள் இறந்த உறவுகளை நினைவு கூரும் இவ்வேளையில் அந்த உரிமைகள் மறுக்கப்பட்டு, இராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அவை நடக்கின்றன.
மாவீரர் துயிலும் இல்லங்கள் பல இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி புனிதமான இடமாக அவற்றைப் பேணுவதற்காக இடமளிக்க வேண்டும் என்று கேட்பதுடன், நினைவேந்தலை நடத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!