“விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்” – அய்யாக்கண்ணு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயச் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களைத் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் சேர்ந்து பார்வையிட்டார். தொடர்ந்து பல்லவராயன் பேட்டை, அருண்மொழித்தேவன் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் இறங்கிப் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரடியாகப் பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார்.
    
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விவசாயிகள் சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும் தற்போது கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலில் விவசாயிகள் இருப்பதாகவும் கூறினார். அரசு மயிலாடுதுறை மாவட்டத்தை மழையால் பாதிக்கப்பட்ட பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மந்திரிகள் இருக்கும் மாவட்டங்களுக்கு மட்டும் பயிர்க் காப்பீடு தொகை அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மந்திரிகள் இல்லை என்பதால் குறைந்த அளவிலான தொகை அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

டெல்லியில் விவசாயிகள் போராடிய போது அமித்ஷா வட்டி இல்லா கடன் 5 லட்சம் தருவதாகக் கூறியிருந்ததாகவும் தற்போது வரை தரவில்லை என்றும் தெரிவித்தார். விவசாயிகள் குறை கூறினால் கோபப்படாமல் மாவட்ட ஆட்சியர் கேட்க வேண்டும் என்றும், அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் குறைந்தது ஏக்கருக்கு 30,000 அரசு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் வந்தால் அரசு விவசாயிகளை முதுகெலும்பாக நினைப்பதாகவும் தேர்தல் முடிந்த பிறகு நாட்டினுடைய அடிமைகளாக அரசு தங்களைப் பார்ப்பதாகவும் , சுதந்திர இந்தியாவில் தான் வாழ்கிறோமா அல்லது பிரிட்டிஷ் ஆட்சியில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறினார்.

வெளிநாடுகளில் உணவு இறக்குமதி செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவை மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் என்றும் அதைச் சாப்பிட்டால் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு மற்றும் பெண்களுக்குக் கருத்தரிப்பு உள்ளிட்ட குறைபாடுகள் வரும் எனவும் கூறினார். உரிய நிவாரண அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றால் ஆட்சியர் அலுவலகம் அல்லது சென்னையில் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!