விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்த தயாராகும் அமைச்சர்கள்-பல விடயங்களை வெளியிட உள்ளதாக தகவல்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று அவசர செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பு பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளதுடன் அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட அமைச்சர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பி் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவும் கலந்து்ககொள்ள உள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தொடர்பாகவும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருவது பற்றியும் எதிர்கால அரசியல் விடயங்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை இவர்கள் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவையும்  அந்த கட்சி தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியது.

இவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில், சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க, கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை மீறி, வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நேற்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!