ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்ட நிதி தனிப்பட்ட ஊழியர்களுக்கு செலவிடப்பட்டதா..! மைத்திரி வெளிப்படுத்திய விடயம்

ஜனாதிபதியின் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 57 சதவீதத்தை தமது தனிப்பட்ட ஊழியர்களுக்கு செலவிட்டதாக வெளியான தகவல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், எனக்கு முன்பாக பதவியிலிருந்த மகிந்த ராஜபக்சவும், நானும் எமது தனிப்பட்ட ஊழியர்களுக்காக செலவழித்த செலவினங்கள் பற்றிய விபரங்களை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் லயனல் குருகே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், அவரை மேற்கோள்காட்டி பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் என்னை தாக்கத் தொடங்கியுள்ளன. அவருக்கு தகவல் வழங்கியவர்கள் தவறான தகவல்களை அளித்துள்ளனர்.

எனக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நாடளாவிய ரீதியிலான பல முக்கிய திட்டங்களுக்கு செலவிட்டுள்ளேன். இதில் கிராம சக்தி திட்டம், சிறுநீரக நோய் தடுப்பு திட்டம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு திட்டம் ஆகியவையும் அடங்கும்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஆவணங்களில் கையெழுத்திட்டேன். அந்த காலப்பகுதியில் இவர்களுக்கு மரண தண்டனை வழங்க அனுமதித்திருந்தால் போதைப்பொருள் விவகாரம் இன்று பாரதூரமானதாக இருந்திருக்காது.

மேலும் நான் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச செயலர்களுக்கு 1000 மடிக்கணினிகளை வழங்கி வைத்தேன். எனவே குறித்த ஊடக நிறுவனங்கள் தங்கள் அறிக்கைகளை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!