தெற்கு ரஷியாவில் பரபரப்பு: கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய 2,500 சீல்கள்!

தெற்கு ரஷியாவின் காஸ்பியன் கடற்கரையில் கிட்டத்தட்ட 2,500 சீல்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. திடீரென இத்தனை சீல்கள் உயிரிக்க காரணம் தெரியவில்லை எனவும், ஒருவேளை அவை இயற்கையாக உயிரிழந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    
முதலில் 700 சீல்கள் இறந்திருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் நடத்தப்பட்ட விரிவான ஆய்வில் இந்த எண்ணிக்கை 2,500 ஆக அதிகரித்தது. காஸ்பியன் சுற்றுச்சூழல் மைய தலைவர் ஜார் காபிசோவ் கூறுகையில், இவை ஒரு வாரத்திற்கு முன் உயிரிழந்திருக்கலாம், அவை வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சீல்கள் இறந்திருக்கும் சம்பவம் ஏற்கெனவே பல முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காஸ்பியன் கடல் பகுதியில் சுமார் 3 லட்சம் சீல்கள் வரை இருக்கின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!