தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள்!

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை துரிதப்படுத்தாது அவர்களை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தெரிவிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தோட்டப்பகுதியில் ஏழ்மை நிலை அதிகரித்துள்ளது என்பதையாவது அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
    
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்களுக்கான நேற்றைய (08) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாட்டின் ஏழ்மைநிலைக்கு தள்ளப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இதற்கு அரசாங்கம் பதில் வழங்குவதாகக் கூறியுள்ளது.

தோட்டப் பகுதியில் ஏழ்மைநிலை 51 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கு அரசாங்கம் வழங்கும் பதிலில் தோட்டப் பகுதிகளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்பதையும் கூற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

உணவுப்பாதுக்காப்பும் தோட்டப் பகுதிகளில் 53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவற்றை நாம் கூறவில்லை உலக வங்கியே கூறுகிறது. இலங்கையில் தோட்டப் பகுதிகளில் உள்ளவர்களே ஏழ்மையில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் அவர்களின் ஏழ்மை நிலைமை இன்னும் அதிகரித்துள்ளது என்றார்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு -செலவு திட்டத்தில் இந்த விடயத்தை ஏற்றுக்கொள்ளும்படியாக எதனையும் குறிப்பிடவில்லை. நாட்டின் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு விசேட நிவாரணங்களை வழங்கும் நிலையில் அரசாங்கம் இல்லை என்பது எமக்குத் தெரியும். ஆனால், ஆகக் குறைந்தது தோட்டப் பகுதிகளில் ஏழ்மை நிலைமை அதிகரித்துள்ளது என்பதையாவது அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டில் ஏற்படும் மாற்றங்கள் முற்போக்கானதாக இருக்க வேண்டும். குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இதன்படி, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ சிறைச்சாலையில் வெறும் 40 தமிழ் கைதிகளே இருப்பதாகக் கூறியுள்ளதோடு அவர்களின் வழக்குகளை விரைவுப்படுத்தி விசாரணை செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

வழக்குகளை விரைவுப்படுத்தாது, அவர்கள் அனைவரையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும். தீபாவளித் தினத்தன்று சில தமிழ் கைதிகளை ஜனாதிபதி விடுவித்தபோல பொங்கலுக்கும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கொழும்பு நகர்புறத்தில் உள்ள ஏழ்மைநிலையில் உள்ளவர்களுக்கு சமூர்த்திக் கொடுப்பனவுகள் முறையாகக் கிடைப்பதில்லை. எனவே, மின்சாரக் கட்டணத்தின் அடிப்படையில் சமூர்த்திப் பயனாளிகளை கொழும்பு நகர் புறங்களில் தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!