கட்டணங்களை அதிகரிக்கவும், வளங்களை விற்கவும் ஜனாதிபதி தேவையில்லை!

பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளிவிட்டு, நாட்டினுடைய தேசிய வளங்களை விற்பனை செய்வதன் மூலம் மாத்திரமே தீர்வு காண முடியுமென்றால் நாட்டுக்கு ஜனாதிபதி ஒருவர் தேவையில்லை. மேலும் நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள் மீது அதிக வரி விதித்துள்ளோம் என்பதை சர்வதேச நாணய நிதியத்திற்கு காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
    
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பொருளாதார நெருடிக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது 92 வீதம் வரி விதித்ததை சர்வதேச நாணய நிதியத்திற்கு காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தை மகிழ்விக்கும் செயற்பாடே நடைபெறுகிறது. மேலும் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தன்னுடைய மற்றும் அரசாங்கத்தின் இயலாமையே தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார்.

தற்போது தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு ஏலம் எடுக்கும் வேலையை அவர் ஆரம்பித்துள்ளார். நாட்டு மக்கள் இன்று உண்பதையும் , குடிப்பதையும் மறந்துவிட்டார்கள். பெரும்பாலான மக்கள் கடனை அடைக்க முடியாமல் கடும் வறுமையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வியாபாரம் செய்பவர்கள் இன்று பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சிலர் கடனை அடைக்க முடியாமல் தங்கள் சொத்துக்கள் விற்பனை செய்வதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து என்ன சொல்கிறார்? மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும். நிறுவனங்களை விற்கவேண்டும் என்கிறார். எனினும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கும், நீர்க் கட்டணத்தை அதிகரிப்பதற்கும் தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கும் நாட்டுக்கு ஜனாதிபதி தேவையில்லை. சொத்துக்களை விற்பனை செய்வதற்கு தரகர்கள் இருக்கிறார்கள் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!