தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி இணக்கம்!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அதிகாரப் பகிர்வு, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாக நேற்றைய சர்வகட்சி கலந்துரையாடலில் பங்கேற்ற தமிழ் தலைமைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
    
ஆனாலும், அடுத்து ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னதாக இவை தொடர்பில் பேசி இறுதி தீர்மானம் எடுப்போம் எனும் முடிவோடு ஜனாதிபதி இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
நாங்கள் மூன்று விடயங்கள் குறித்து பேசினோம். முதலாவதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, நில ஆக்கிரமிப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசினோம்.

இது தொடர்பில் உடனடியாக உரியவர்களுடன் பேசி, ஜனவரி மாசத்திற்குள் உரிய தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி அளித்திருக்கின்றார். இரண்டாவதாக, ஏற்கனவே சட்டத்திலும் அரசியலமைப்பிலும் இருக்கின்ற அதிகார பகிர்வு சம்பந்தமான விடயங்களை எப்படியாக நடைமுறைப்படுத்துவது? மாகாண சபைத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலும் கருத்துக்களை முன் வைத்திருந்தோம். அதற்கு ஜனவரி மாத பேச்சின் போது அது தொடர்பான தீர்மானங்களை எடுக்கலாம் என்று பதில் கூறியிருக்கின்றார்.

மூன்றாவதாக, நீண்ட காலமாக இருக்கப் போகின்ற புதிய அரசியலமைப்பு சம்பந்தமான விடயங்களையும் எடுத்துக்கூறி இருந்தோம். அதிலே அதிகாரங்களை பகிர்வது உட்பட எல்லா விடயங்களையும் உள்ளடக்கியதாக நாங்கள் கோரிக்கைகளை முன் வைத்தோம். இதற்கு ஜனாதிபதி கூறிய பதில் “இதற்காக நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது இல்லை. இது தொடர்பாக ஏற்கனவே பல அறிக்கைகள் இருக்கின்றன. இணக்கப்பாடுகள் இருக்கின்றன. வரைபுகள் கூட இருக்கின்றன.

ஆகவே அவற்றை எல்லாம் சேர்த்து எப்படியான விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது குறித்து ஜனவரி மாதத்திலேயே நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். ஏனென்றால், அடுத்த வருடம் இடம்பெற இருக்கின்ற 75 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கு முன்னதாக நாட்டிலே இன நல்லிணக்கம் ஏற்படுமா? இல்லையா? என்பது குறித்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று அவரே ஒரு காலக்கெடுவை வைத்திருக்கின்றார்.

ஆகவே ஜனவரி மாதத்தில் இடம்பெற இருக்கின்ற அந்தப் பேச்சு வார்த்தையில் இருந்து நாட்டிலே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா? அல்லது முடியாதா என்று ஒரு முடிவுக்கு வரலாம்.
பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னதாக தான் இது குறித்த முடிவை அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி எம்மிடம் கூறி இருக்கின்றார். ஆகவே மிகவும் குறைந்த காலகட்டமாக இருந்தாலும் அந்தக் காலகட்டத்தினுள் இந்த விடயங்கள் சம்பந்தமாக பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு அனைவரும் முயற்சி எடுப்போம் என்று கூறி இருக்கின்றோம்” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!