நித்தியானந்தாவுக்கு லண்டனில் விருந்தளித்த இங்கிலாந்து எம்.பி.க்கள்!

தமிழகத்தின் சர்ச்சை சாமியாரான நித்தியானந்தாவுக்கு லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் தீபாவளி விருந்து கொடுத்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. முதலில் கிரிவலப் பாதை எனப்படும் நடைபாதையில் குடில் அமைத்து ஆசிரமம் அமைத்தவர் நித்தியானந்தா. ஊடக வெளிச்சங்களில் நித்தியானந்தா புகழ் பெற்றார்.
    
தொடர்ந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கர்நாடகாவின் பிடதி, குஜராத்தின் அகமதாபாத் என பல இடங்களிலும் ஆசிரம கிளைகளை உருவாக்கினார். பகலில் சாமியாராக வலம் வரும் நித்தியானந்தா இரவில் நடிகைகளுடன் சல்லாபிக்கும் காட்சிகள் ஊடகங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் வரிசை கட்டியதனால் கைது நடவடிக்கைக்கு அஞ்சி இமாச்சல பிரதேசத்துக்கு நித்தியானந்தா தப்பி ஓடினார்.

அங்கு கைதான நித்தியானந்தா பின்னர் நெருக்கடிகளில் இருந்து தப்பித்து 2019-ம் ஆண்டு இந்தியாவை விட்டு ஓடிவிட்டார் நித்தியானந்தா. அதன்பின்னர் இன்றளவும் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் கரீபியன் தீவுகளில் ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அதன் அதிபராக தன்னை பிரகடனம் செய்து கொண்டு சமூக வலைதளங்களில் நித்தியானந்தா பதிவிட்டு வருகின்றார்.

கைலாசா தேசத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை இதன் உச்சமாக, கைலாசா தேசத்துக்காக பல்வேறு நாடுகளில் பணிபுரிய ஆட்கள் தேவை எனவும் விளம்பரம் வெளியானது . இந்நிலையில்தான் தீபாவளியின் போது லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் நித்தியானந்தாவுக்கு விருந்து கொடுத்தனர் என தகவல் வெளியானது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில், இந்தியாவில் தேடப்படுகிற பாலியல் குற்றவாளியான நித்தியானந்தாவுக்கு இங்கிலாந்து எம்பிக்கள் எப்படி விருந்து கொடுக்கலாம் எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நித்தியானந்தாவின் இங்கிலாந்து வழக்கறிஞர் இதனை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!