அடுத்தாண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடக்காது என தகவல்

அரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பு உட்பட சில காரணங்களினால், அடுத்தாண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசாரங்களில் கலந்துக்கொள்ளும் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலைமை

தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்க முடியாமை, தேர்தலுக்கு செலவாகும் பெருந்தொகை பணத்தை வழங்க அரசாங்கத்திற்கு வழங்க முடியாமல் இருப்பது போன்றவை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்ட காலத்தில் ஏற்பட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான வன்முறையான நிலைப்பாடு தற்போதும் சில நபர்களிடம் இருப்பதாகவும் இதனால், தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் முக்கிய அரசியல்வாதிகள் கலந்துக்கொள்வதில் சிரமமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசின் அன்றாட செலவுகளுக்கு பணத்தை பெற்றுக்கொள்ள நிதியில்லை என்பதுடன் நாட்டுக்கு தேர்தலுக்காக பெருந்தொகையை செலவிட முடியாது.

இதனால், வேட்புமனுக்கள் கோரப்பட்ட பின்னர்,தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் எனவும் அந்த அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு முன்னர் கடந்த 1987-89 ஆம் ஆண்டுகளின் வன்செயல் காலத்தில் வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்த நிலைமையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்தல் மீண்டும் 1991 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதுடன் புதிதாக வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!