சிறிலங்கா அதிபருடன் அமெரிக்காவின் பசுபிக் இராணுவத் தளபதி பேச்சு

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெனரல் ஜெனரல் ரொபேர்ட் பிறவுண், நேற்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில், சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழுவும் பங்கேற்றது.

இதன்போது, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை மற்றும் அனர்த்தங்களின் போதான ஒத்துழைப்புகளுக்கு அமெரிக்க ஜெனரல் இணக்கம். தெரிவித்தார்.

அதேவேளை, சிறிலங்காவில் அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நிபுணத்துவ பரிமாற்றங்களை செய்வதற்கும் இந்தச் சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!