தேர்தல் செலவுக்கு திறைசேரிப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட நடவடிக்கை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சுமார் 11 பில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படாத காரணத்தினால், திறைசேரி பத்திரங்களை வழங்குவதன் மூலம் நிதி திரட்டப்பட வேண்டும் என்று திறைசேரி வட்டாரங்கள் மூலம் அறியமுடிகிறது.
    
தேவைப்படும் தொகையான சுமார் 11 பில்லியன் ரூபாயை திறைசேரி பத்திரங்களை கொடுப்பதன் மூலம் வழங்கினாலும் அதற்கு வட்டி செலுத்த வேண்டியிருப்பதால் அரசாங்கத்துக்கு சுமார் 14 பில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வேட்புமனு தாக்கல் செய்த பின்னரும் அரசாங்கத்தால் தேர்தலை ஒத்திவைக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் அழைப்பு விடுக்கும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன. இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது இயல்புநிலையை மீட்டெடுக்கும் என்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சிகளை சீர்குலைக்கும் என்றும் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிதி இல்லை என்று கூறி தேர்தலை தாமதப்படுத்துவது நியாயமற்றது எனவும் தேர்தலை தாமதப்படுத்தினால் அது ஜனநாயகத்துக்கு ஆபத்தாகிவிடும் என்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!