சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களுடன் சந்திரிகா நடத்திய பேச்சுவார்த்தை-அடுத்த நகர்வுக்கான திட்டங்கள் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டுள்ள அணியினருக்கும் இடையில் சிறப்பு பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மகிந்த அமரவீர, ராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, ஜகத் புஷ்பகுமார, நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 124 வது ஜனன தினத்தை முன்னிட்டு காலிமுகத்திடலில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகில் நேற்று நடைபெற்ற நிகழ்விின் பின்னர் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இதன் போது தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்திரிகாவின் திட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர் மைத்திரிபால சிறிசேனவை அந்த பொறுப்பில் இருந்து அகற்றி விட்டு, கட்சியை கைப்பற்று அரசியல் நகர்வுகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கொண்டு வருகின்றார். கொழும்பு டாலி வீதியில் இருப்பது சுந்திரக்கட்சியின் பெயர் பலகை மாத்திரமே எனவும் பண்டாரநாயக்கவின் தத்துவத்தை பின்பற்றும் கட்சியினர் அங்கு இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறி வருகிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!