எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் இல்லை-மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தனக்கு எவ்வித தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 124 ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க அவர்கள் பிறந்த தினமான ஜனவரி 8 ஆம் திகதியே நான் நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தேன். பண்டாரநாயக்கவின் தத்துவ ரீதியிலான கொள்கைகளை நடைமுறைப்படுத்த முயற்சித்தன் காரணமாக எனது அரசாங்கத்திற்குள் நெருக்கடி ஏற்பட்டது.

அதனை தவிர தற்போதைய ஜனாதிபதிக்கும் எனக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த மோதல்களும் இல்லை. தற்போதைய புதிய தலைமுறைக்கு பண்டாரநாயக்கவின் கொள்கை என்றால் என்னவென்று தெரியாததே தற்போதுள்ள பிரச்சினை.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறிந்தோ அறியாமலோ பண்டாரநாயக்கவின் தத்துவ ரீதியான கொள்கைக்கு அமைய நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்றே கேட்டனர் எனவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!