அரசு நினைத்த மாதிரி தேர்தலைப் பிற்போட முடியாது: ஆணைக்குழு திட்டவட்டம்

அரசு நினைத்த மாதிரி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல காரணங்களை முன்வைத்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு, அதாவது ஜூலை மாதம் வரை ஒத்திவைப்பதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது என வெளியாகிய செய்தி தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான திட்டங்கள் எதுவும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இல்லை. அரசும் நினைத்த மாதிரி உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு ஏற்கப்படுவதற்கு முன்னதாக தேர்தலை ஒத்திவைக்க இடமில்லை.

நீதிமன்றம் ஊடாக அல்லது நாடாளுமன்றம் மூலமே தேர்தலை ஒத்திவைப்பதற்கான நகர்வுகளை மேற்கொள்ள முடியும். அதற்கும் தகுந்த காரணங்களை முன்வைக்க வேண்டும். தேர்தல் தொடர்பான ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்தார் எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!