மகிந்த, கோட்டாவுக்கு எதிராக தடைகளை விதித்தது கனடா!

கனடா முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட நால்வருக்கு எதிராக தடைகளை விதித்துள்ளது. சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க லெப்கொமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு எதிராகவும் கனடா தடைகளை அறிவித்துள்ளது.
    
இலங்கையில் 1983 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை இடம்பெற்ற ஆயுதமோதலின் போது மனித உரிமைகளை பாரியளவில் திட்டமிட்டு மீறியமைக்காக நான்கு இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக சிறப்பு பொருளாதாரநடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கனடா இலக்குவைக்கப்பட்ட தடைகளை விதித்துள்ளது என கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள் பட்டியலிப்பட்ட நபர்களிற்கு பரிவர்த்தன தடையை விதிக்கின்றன,இது கனடாவில் அவர்கள் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களையும் திறம்பட முடக்கி கனடாவின் குடிவரவு சட்டத்தின் கீழ் அவர்கள் கனடாவிற்குள் நுழைய முடியாதவர்களாக்குகின்றது.

கனடாவும் சர்வதேச சமூகமும் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலிற்கான வேண்டுகோளை விடுத்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்ற மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையே எடுத்துள்ளது, இது பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதி கிடைப்பதில் முன்னேற்றத்தை தடுக்கின்றது,அமைதி நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகளையும் பாதிக்கின்றது.

மிகமோசமான மனித உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்களிற்கு நீதி அவசியம் இதன் காரணமாகவே இலங்கை அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறல் நடவடிக்கையை உருவாக்குவது குறித்த தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்துவருகின்றது.

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்த விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான உறுதி செய்தி இது எனவும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!