தமிழக அரசு படைத்துள்ள புதிய சாதனை!

தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு மேம்படவும், உணவு உற்பத்தியை பெருக்கிடவும், அரசு பொறுப்பேற்றவுடன், இதற்கு முன் எந்த அரசும் செய்திடாத ஒரு சாதனையாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஓராண்டில் இலவச மின்சாரம் என அறிவித்ததுடன், அறிவித்த 6 மாதங்களில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கும் மின் இணைப்புகளை வழங்கியது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் மக்களுக்கான இந்த அரசு, தமிழ்நாட்டில் பசுமை புரட்சிக்கு வித்திடும் விதமாக, 2022-2023-ம் ஆண்டு எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையில், இந்த நிதியாண்டிலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    
அதன்படி, கடந்த 11.11.2022 அன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சரால் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, அன்றைய தினமே 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. மேலும், இத்திட்டம் 100 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று அன்றைய தினம் விழா மேடையில் அறிவிக்கப்பட்டது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவரும் இந்த அரசின் செயல்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக, இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட நாளான 11.11.2022-ல் இருந்து 61 நாட்களிலேயே, அதாவது கடந்த 9-ந்தேதியன்றே, 50 ஆயிரம் விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கி வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம், இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த 1½ ஆண்டுகளில் மொத்தம் 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கி புதிய சாதனை படைத்திருக்கிறது.

இதனால், தமிழ்நாட்டில் பாசனப் பரப்பு விரிவடைந்து, விளைச்சல் அதிகரித்து, உற்பத்தியும் பெருகி வருகிறது. நடப்பாண்டில் இலவச மின்சாரம் வழங்கப்பட்ட 50 ஆயிரம் விவசாய பயனாளர்களில், 50 ஆயிரமாவது பயனாளி உள்பட 5 பேருக்கு மின் இணைப்பு ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!