ஜனாதிபதிகள் மாறினாலும் நிலைமைகளில் மாற்றமில்லை-மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதிகள் மாறிய போதிலும் அது நாட்டின் மனித உரிமை நிலைமைகளில் எந்த முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகளை மீளாய்வு செய்யும் தனது 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஊடாக மனித உரிமை கண்காணிப்பகம் இதனை இன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். பல ஆண்டு தவறான நிர்வாகம் காரணமாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமை, ஊழல், சட்டத்தின் ஆட்சியை ஒடுக்கியதன் பின்னர் உருவான கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர்.

பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பில் நீண்டகாலமாக குற்றச்சாட்டை எதிர்நோக்கி வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகினார்.
கோரிக்கைகளுக்கு அடக்குமுறை மூலம் பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க

அதன் பின்னர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, பெரும்பாலும் அமைதியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை அடக்கினார். அதன் செயற்பாட்டாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த காலத்தில் சட்டங்கள் மீறப்பட்டமை சம்பந்தமாக நீதியை வேண்டி விடுக்கப்பட்ட கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மறுசீரமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடக்குமுறை மூலம் பதிலளித்துள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண உதவும் வெளிநாட்டு பங்காளிகள், இலங்கை மக்களின் அடிப்படை மனித உரிமைகளின் மறுசீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளிப்பது குறித்து கவனம் செலுத்துவது தொடர்பில் இலங்கையை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். 712 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் மனித உரிமை கண்காணிப்பகம் சுமார் 100 நாடுகளின் மனித உரிமை நிலைமைகளை மீளாய்வு செய்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம், மாணவர் செயற்பட்டாளர்களை தன்னிச்சையான முறையில் தடுத்து வைக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தியதையும் எதிர்ப்பை அடக்கிய விதமும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட அழுத்தங்களின் பின்னர் மார்ச் மாதம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் மேலோட்டமான திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அந்த சட்டத்தை இரத்துச் செய்வதை இலங்கை அரசு மீண்டும், மீண்டும் தவிர்த்து வருவதாகவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!