சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம தலைமையில் புதிய கூட்டணி

தெரிவு செய்யப்பட்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கு 43 வயது படையணியும் குமார வெல்கம தலைமையிலான நவ லங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து போட்டியிட உள்ளதாக 43வது படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கான உடன்படிக்கையை இன்று செய்துக்கொண்டதாக கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர், புதிய அரசியல் சக்தி ஊடாக எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குமார வெல்கமவின் நவ லங்கா சுதந்திரக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். எமது பார்வைக்கு அமைய எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நாட்டின் ஜனநாயகத்திற்கு அமைய எமது மக்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பம். 2022 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் நேரடியான நடவடிக்கை மூலம் அன்றைய ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தை விரட்டியடித்தனர்.

அவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்கள், பொது அவமானம், மக்களின் அதிருப்தி இருக்கும் நிலையில், நாடாளுமன்றம் மற்றும் நகர சபைகள் ஊடாக தமது அதிகாரத்தை தக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். நாங்கள் இந்த சந்தர்ப்பத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதன் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட தலைவர்களுக்கு எதிராக மக்கள் தமது எதிர்ப்பை காட்ட வேண்டிய சந்தர்ப்பமாக பார்க்கின்றோம்.

தேர்தலை இலக்கு வைத்தோ, அரசியல் கட்சியாகவோ 43 வது படையணி ஆரம்பிக்கப்படவில்லை. எனினும் நாடு வங்குரோத்து அடைத்த பின்னர், எதிர்காலத்தில் புதிய அரசியல் கட்சியாகவும் அரசியல் அமைப்பாகவும் மாற்றுவது என நாங்கள் கடந்த ஆண்டு தீர்மானித்தோம். ஆனால், எமக்கு காலம் தடையாக அமைந்தது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசியல் அமைப்பாக கிராம மட்டத்தில் நாட்டை ஆட்சி செய்யும் வரை செல்லக்கூடியவர்களுடன் பயணிக்க போகிறோம் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!