மகிந்த, கோட்டா, சந்திரிகா, சரத்துக்கும் மைத்திரியின் நிலை வரலாம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு போர்க் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்‌ஷ மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவத்தினர்,உயர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க தீர்ப்பு வழி சட்டமாக அமையலாம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையான விமர்சித்து கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அந்த விவாதத்தில் சரத் பொன்சேகாவுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவிக்கையில் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் சட்ட ஒழுங்கு அமைச்சு பதவியை வழங்காத காரணத்தினாலேயே பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றார். அவர் இராணுவத் தளபதியாக இருந்தவர் என்பதனால் அவரை பொலிஸ் அமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று பல்வேறு பொலிஸ் அதிகாரிகளும் கேட்டுக்கொண்டனர். இதன்படியே அவருக்கு அந்த அமைச்சுப் பதவியை வழங்கவில்லை.

பொறுப்புக் கூறல் என்பது அனைத்து நாடுகளிலும் இருக்கும் விடயமாகும். கீழ் நிலையில் உள்ள அதிகாரிகள் செய்யும் குற்றங்களுக்கு உயர் பதவிகளில் இருப்பவர்கள் பொறுப்பு கூற வேண்டும் என்பதே கால்டோனா சட்டமாகும். இந்நிலையில் முதற்தடவையாக இலங்கையில் இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் வழக்கில் கால்டோனா சட்டத்தின் பிரகாரம் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் சில காலத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இதுபோன்ற தீர்ப்பு வழங்கப்படலாம். முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் விமர்சனங்களை கூறிக்கொண்டு தானும் அதுபோன்ற குற்றங்களை செய்துள்ளார்.

இந்தத் தீர்ப்பின் ஊடாக யுத்தத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பில் முன்மாதிரியொன்று ஏற்பட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையில் போர்க் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதிக்கு அமெரிக்கா போக முடியாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கு கனடாவுக்கு போக முடியாது. யுத்தத்தினால் ஏற்பட்ட நிலைமையே இதற்கு காரணமாகும்.

மனித உரிமைகள் பேரவையில் வழக்குத் தொடர்ந்தால் இவர்கள் அனைவரும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும். இந்த நாட்டுக்காக சேவையாற்றிய யுத்த வெற்றிக்காக உத்தரவிட்ட மகிந்த ராஜபக்‌ஷ,கோட்டாபய ராஜபக்‌ஷ, சந்திரிகா குமாரதுங்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கும் கோடி கணக்கில் நஷ்ட ஈட்டை செலுத்த வேண்டி வரலாம். இதன்படி முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான தீர்ப்பு இந்த அதிகாரிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதனையே சுட்டிக்காட்டுகின்றது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!