ஜனாதிபதியை சந்தித்த சம்பந்தன் மற்றும் சுமந்திரன்! வழங்கப்பட்டுள்ள உறுதிகள்

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர சுமந்திரன் ஆகியோர் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் நேற்று (20.01.2023) மாலை 3.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது.

அதில் ஜனாதிபதியோடு அமைச்சர்களான பவித்ரா வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா மற்றும் அலி சப்ரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். பல திணைக்கள தலைவர்கள், தொல்லியல் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், வனவிலங்கு பாதுாப்பு திணைக்களம் போன்ற தலைவர்கள் அதில் பங்குபற்றியிருந்தனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறுகையில், விசேடமாக நிலங்கள் விடுவிக்கப்படுவது சம்பந்தமாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், ஜனாதிபதி ஏற்கனவே அறிவித்த படி இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக பலாலி கிழக்கில் விவசாயத்திற்காக ஒரு பகுதி ஆரம்பத்தில் விடுவிக்கப்படும் என கூறப்பட்டது. கூடுதலாக வன பாதுகாப்பு, வன விலங்கு திணைக்களங்கள் மக்களுடைய காணிகளை அபகரித்திருக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே சொன்ன பல விடயங்கள் தொடர்பில் நாம் இதன்போது வினவியிருந்தோம். தாம் தவறிழைத்ததாகவும் எனவே அதில் மாற்றங்களை செய்ய தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளனர் என குறிப்பிட்டார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!