குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் 26-ந் தேதி குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டில் தலைநகர் டெல்லியில் நடக்கிற குடியரசு தின விழாவின்போது, நட்பு நாடுகளின் தலைவர்களில் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைக்கிற மரபு உள்ளது.
    
ஆனால் கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டிருந்ததால், கடந்த 2021, 2022-ம் ஆண்டுகளில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் சிறப்பு விருந்தினர் என எந்தவொரு வெளிநாட்டு தலைவரும் அழைக்கப்படவில்லை. இந்த ஆண்டு அந்த நிலை மாறி இருக்கிறது. சிறப்பு விருந்தினராக எகிப்து நாட்டின் அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி அழைக்கப்பட்டுள்ளார். அவர் இதற்காக நாளை (24-ந் தேதி) 3 நாள் அரசு முறைப்பயணமாக டெல்லி வந்து சேர்கிறார்.

டெல்லியில் புதுப்பிக்கப்பட்டுள்ள சென்டிரல் விஸ்டா அவென்யூவில் குடியரசு தின அணிவகுப்புக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தியா கேட் மற்றும் ஜனாதிபதி மாளிகை இடையேயான புதுப்பிக்கப்பட்ட கடமைப்பாதையில் (முந்தைய ராஜபாதை) குடியரசு தின ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று அணிவகுப்பின் முழு ஒத்திகை நடைபெறுகிறது. இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது.

தமிழ்நாட்டின் வீரத்தையும், பெருமையும் பறை சாற்றும் வகையில் அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலு நாச்சியார், அவ்வையார் சிலைகளுடன், பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் வடிவமைப்புகளும் இடம் பெறுகின்றன. அசாம், மராட்டியம், உத்தரபிரதேசம், காஷ்மீர், குஜராத், மேற்கு வங்காளம் உள்பட மொத்தம் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 23 அலங்கார ஊர்திகள், குடியரசு தின அணி வகுப்பில் அழகு சேர்க்கப்போகின்றன. பெரும்பாலானவை பெண் சக்தியை மையப்படுத்தி இருக்கும்.

மத்திய அமைச்சகங்கள், அரசு அமைப்புகள் சார்பில் உள்துறை அமைச்சகத்தின் 2 அலங்கார ஊர்திகளும் இடம் பெறுகின்றன. மேலும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் ஊர்திகளும் அணிவகுப்புக்கு கம்பீரம் சேர்க்கும். இநத ஆண்டு அணிவகுப்பில், முப்படையினருடன் எகிப்து நாட்டில் இருந்து 120 ராணுவ வீரர்களைக் கொண்ட அணியினரும் இடம் பெறுகின்றனர். 50 போர் விமானங்கள் விண்ணில் பறந்து வீர சாகசங்களை செய்து காட்டி அசத்தப்போகின்றன.

குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக கலந்து கொண்டு, மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். சிறப்பு மேடையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அணிவகுப்பினை பார்வையிடுவார்கள். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் 42 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு விருந்தினர்களுக்கும் முதல் முறையாக ஆன்லைன் வழியாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. Also Read – பாகிஸ்தான் எல்லையில் போதைப்பொருளுடன் பறந்து வந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது உச்சகட்ட பாதுகாப்பு டெல்லியில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிற நிலையில் நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது அதிர வைத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் குடியரசு தின விழாவையொட்டி உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மத்திய ஆயுதப்படை போலீசார், கமாண்டோ படையினர் என 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தீவிர கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ரோந்து பணியும் நடைபெறுகிறது. முக்கிய இடங்களில் வாகன சோதனைகள் முடுக்கி விடப்படுகின்றன. ஓட்டல்களில் சோதனைகள் நடத்தப்படும்.

இந்திய-பாக். எல்லையில் ரோந்து சர் கிரீக் முதல் குட்ச் ரான் வரையிலான இந்திய, பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையில் துணை ராணுவத்தினர் (எல்லை பாதுகாப்பு படையினர்) ‘ஆபரேஷன் அலர்ட்’ என்ற பெயரில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். குடியரசு தின விழாவில் சமூக விரோத சக்திகள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!