75 வருட அடக்குமுறையின் வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளே பெப்ரவரி-04!

கடந்த 74 வருடங்கள் போல இந்த வருடமும் தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாட ஆரப்பரிக்கிறது சிங்களதேசம். இரு தேசிய இனங்களுக்கிடையே இருக்கும் இன முரண்பாட்டின் இரு துரவ வெளிப்பாட்டை உணர்த்தும் நாளே பெப்ரவரி 04ம் திகதி ஆகும். 75 வருடமாகப் புரையோடிப் போன இனப் பிரச்சனையை 75 நாட்களில் 13ஐ திணித்து தீர்க்க முனைவதுபோல சிறிலங்காவின் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    
தமிழர்களது பிரச்சனை அபிவிருத்திப் பிரச்சனை அல்ல. எமது பிரச்சனை இருப்புக்கான பிரச்சனை என்பதை சிங்களம் தனது பொருளாதாரச் சிதைவின் மத்தியிலும் ஏற்கமறுக்கிறது. ஒற்றையாட்சி முறைமைக்குள் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பது கடந்த கால அனுபவங்கள் பறைசாற்றி நிற்கின்றது. ஆகையினால் ஈழத் தமிழர் ஒற்றையாட்சியை முற்றாக எதிர்த்து நிற்கின்றனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களின் வருகை சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்பிற்கு உதவி செய்வதுடன் பல உடன்படிக்கைகளை ஏற்படுத்தி முற்றுமுழுதாக வியாபார நோக்கம் கொண்டதாகவே அமைந்தது. இந்தியா 13வது திருத்துச் சட்டத்தை அமுல்படுத்த கோருவதானால் அதில் உள்ள சிக்கல்களையும் ஆராயவேண்டும்.

13ற்கு எதிராக சிங்களக் கட்சிகளாலும் பேரினவாத அமைப்புகளாலும் மேல் நீதிமன்றங்களில் போடப்பட்ட 30ற்கு மேற்பட்ட வழக்குகளும் அதன் தீர்ப்புகளும் அந்த திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த விடாது தடுத்துள்ளன. இத்தீர்ப்புகள் அனைத்துமே அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் என்றும் கொழும்பில் உள்ள அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருக்கும் எனவும் குறிப்பாக அதிகாரப் பகிர்வுக்கு இந்தத் தீர்ப்புகள் எதிராகவே வழங்கப்பட்டுள்ளன.

‘கூடுதல் அரசியல் ஆபத்துகள் உள்ள 13வது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது’

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளிடம் கடன் பெறமுடியாத அளவிற்கு இனப்பிரச்சனை இலங்கையின் பொருளாதாரத்தைச் சிதைத்து பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது சிங்கள தேசம். ராஜபக்ச அரசின் காலத்தில் 53 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சிறிலங்காவின் ஏற்றுமதி இலாகா ஊடாக எந்தவிதமான அதிகாரபூர்வமான பத்திரங்களும் இன்றி வெளியே கடத்தப்பட்டுள்ளது. 2023ல் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின் படி சிறிலங்காவின் பணவீக்கம் 48.2 வீதமாக உள்ளது. சிறிலங்காவின் திட்டமிடப்பட்ட நுகர்வோர் விலை வீதம் 29.5 விதம் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. 2023ல் சிறிலங்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி -3 வீதமாகவும் நிலுவையில் உள்ள கொள்முதல் மற்றும் கடன்கள் 780 மில்லயன் அமெரிக்க டொலர்களாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வுகளின்படி சிறிலங்காவில் அதிகரித்து வரும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக உளநலம் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார இலாகா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள கொடுங்கோல் அரசு இன்று பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் அல்லாடுகின்றது. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்ற முன்னோர்களின் முதுமொழி சிங்கள அரசிற்குச் சாலப் பொருந்தும்.

இருவேறான மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டு விழுமியங்களுடன் வாழும் இரண்டு தேசிய இனங்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்துவருவதையும், அடிமைப்படுத்தப்பட்டு அழித்தொழிக்கப்படும் இனமாக தமிழினமும், அடிமைப்படுத்தி அழித்தொழிக்கும் இனமாக சிங்கள இனமும் முரண்நிலையில் பயணிக்கும் இரு துருவ வெளிப்பாட்டினை உணர்த்தும் நாளாகவே 1948 ஆம் ஆண்டிற்கு பின்னரான ஒவ்வொரு பெப்ரவரி-04 உம் கடந்து போகின்றது.

எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனமாக நிம்மதியோடும், கௌரவத்தோடும் நம்மை நாமே ஆண்டு வாழ விரும்பும் எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் என்ற மிக எளிமையான அரசியல் அபிலாசைகளை முன்வைக்கும் தமிழினத்திற்கும் தமிழர்களை அழித்தொழித்து தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமது சிங்கள பௌத்த பேரினவாத மேலாதிக்கத்தினை இலங்கைத் தீவு முழுவதும் நிலைநிறுத்த முனையும் சிங்கள இனத்திற்குமான வேறுபாட்டின் ஆழத்தினை வெளிப்படுத்தும் அடையாள நாளாகவே சிறிலங்காவின் சுதந்திர தினம் அமைந்துள்ளது.

தமிழர்களின் பூர்வீக நிலப்பரப்பில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தும் கொடிகளும் சின்னங்களும் பறக்கவிடப்பட்டு சிங்களத்தின் தேசிய தினத்தை கொண்டாட ஆர்ப்பரிக்கிறது சிங்கள அரசு. வக்கற்ற தமிழ் அரசியல்வாதிகள் கைகட்டி வாய்பொத்தி மௌனமாக உள்ளனர். மக்கள் புரட்சி வெடித்தால் மட்டுமே தமிழர் தேசத்தைக் காப்பாற்றமுடியும்.

தற்போதைய பொருளாதார நிலைமையின் காரணமாகவே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. சிங்கள அரசு உண்மையைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம் வெற்றிகொள்ள முடியும் என்று நம்புகிறதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் தீர்வுத்திட்டம் என்ற போர்வையில் தமிழ் அரசியல்வாதிகளை பேச்சுவார்த்தைக்கு மேசைக்கு அழைத்து சர்வதேசத்தின் முன் போலி நாடகமாடி இழுத்தடிப்புச்செய்து தனது பொருளாதாரத்தைச் சீர்செய்வதே சிங்களத்தின் உள்நோக்கம் என்பது எமது கடந்தகால அனுபவங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன.

சிங்கள பேரினவாத அரசுகளின் இன அழிப்புக் கொடூரமானது, வடிவங்களும் வழிமுறைகளும் மாறியபோதிலும் எமது மக்கள் காலம் காலமாக அனுபவித்து வரும் கொடுமைகள் தீர்ந்தபாடில்லை. நிரந்தரத் தீர்வுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி முடிவின்றித் தொடரும் இந்த நிலை மாறவேண்டுமாயின் மக்கள் பெரும் சக்தியாகத் திரண்டெழுந்து புரட்சி செய்தால் மட்டுமே எமக்கான தீர்வு பற்றி சிங்களம் சிந்திக்கும்.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்ட கொள்கையின் அடிப்படையில் ஓரணியில் உறுதியுடன் போராடுவதே தொடரும் சிங்கள பௌத்த பேரினவாத பேயாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதுடன் எமது தேசிய அபிலாசைகளை வென்றெடுத்து எமது வரலாற்றுத் தாயகத்தில் நிம்மதியாகவும், கௌரவமாகவும் வாழ வழியேற்படுத்தும்.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான முக்கிய காரணம் ஒற்றையாட்சி அரசியலமைப்பாகும். ஓற்றையாட்சி முறையை இல்லாதொழித்து தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டுமாயின் சிங்கள அரசியல்வாதிகள் தமது மக்களுக்கு இனப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும். ஒற்றையாட்சி முறைமை இருக்கும் வரை சிறிலங்காவில் யாருக்குமே சுபீட்சமான வாழ்வு அமையப்போவதில்லை.


– அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!