காதலர் தின சர்ச்சை: திடீரென பின்வாங்கிய விலங்குகள் நல வாரியம்!

உலக காதலர் தினமான பிப்ரவரி 14-இல் பசு கட்டிப்பிடிப்பு தினத்தை கொண்டாடுங்கள் என கூறி இணையவாசிகளிடம் சிக்கி, தற்போது அதில் இருந்து பின்வாங்கியுள்ளது இந்திய விலங்குகள் நல வாரியம். உலகம் முழுக்க பெரும்பாலான நாடுகளில் பிப்ரவரி 14ஆம் தேதி ஆண்டு தோறும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மட்டுமல்லாமல் இந்த வாரத்தில் இருந்தே சாக்லேட் தினம், காதலை சொல்லும் தினம், பரிசு வழங்கும் தினம், முத்தம் கொடுக்கும் தினம், கட்டிப்பிடிக்கும் தினம் வரிசையாக கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
    
காதலர்களுக்கு அதிர்ச்சி செய்தி : இந்த நிலையில் தான் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் இருந்து ஓர் அதிர்ச்சி (காதலர்களுக்கு) செய்தி வெளியானது. அதில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதியானது பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறும் தினமாக கொண்டாட வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருவாதாகவும், நமது கலாசாரம் பண்பாடு மறக்கக்கடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறி, பசுக்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் மன ரீதியான வளம் அதிகரிக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மீம்ஸ் : விலங்குகள் நல வாரியம் அறிவித்தது தான் மிச்சம், இணையாவசிகள் மீம்ஸ் போட்டு இணையத்தை நிரப்பிவிட்டனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை, விமர்சனத்தை முன்வைத்தனர். மதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் ‘மகிழ்ச்சி பொங்க’ இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதானியை மோடி அணைப்பார். மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு,” என்று தனது விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.

வன்முறை : இப்படி ஒரு பக்கம் கலாய்த்து கொண்டிருக்க, இன்னோர் தரப்பு, பொதுவாகவே காதலர் தினத்தன்று வட மாநிலங்களில் ஒரு சில பிரிவினர் இந்த காதலர் தினத்தை எதிர்த்து வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதுண்டு. அதனை நாம் ரஜினிகாந்த் படத்தில் பேட்ட படத்தில் கூட பார்த்திருப்போம். அதில் விஜய் சேதுபதி , பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கூட இந்த மாதிரியாக காதலர் தினத்தில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை காட்சிப்படுத்தி இருப்பர்.

மறைமுக எதிர்ப்பு? : இந்த வன்முறை சம்பவங்களையும் கருத்தில் கொண்டு தான் காதலர் தினத்திற்கு மறைமுக எதிர்ப்பை இந்திய விலங்குகள் நல வாரிய அமைப்பு மேற்கொண்டு பசு கட்டிப்பிடிப்பு தினத்தை கொண்டு வந்தது என சில விமர்சனங்களும் எழுகிறது.

வாபஸ் : இந்த மாதிரியான எதிர்ப்புகளை பார்த்தாலோ என்னவோ, நேற்று பசு கட்டிப்பிடிப்பு தினம் எனும் முடிவு பின்வாங்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்திய விலகுங்கள் நல வாரியம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பிப்ரவரி 14, 2023 அன்று பசு அணைப்பு தினத்தை கொண்டாடுவதற்கான இந்திய விலங்கு நல வாரியத்தின் கோரிக்கையானது திரும்பப் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!