சீனாவை வீழ்த்த இந்தியாவிற்கு கைகொடுக்குமா வெள்ளை தங்கம்?

நம் எதிர்கால நன்மை கருதி நமது வங்கி கணக்கில் நமக்கு வேண்டிய ஒருவர் பெரும் தொகையை திடீரென டெபாசிட் செய்தால் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கும். அந்த அளவிற்கு மகிழ்ச்சியை இந்தியாவிற்கு கொடுத்துள்ளது அந்தச் செய்தி. இந்தியாவின் எதிர்கால நன்மை கருதி ஜம்முகாஷ்மீரில் இயற்றை செய்துவைத்திருந்த லித்தியம் டெபாசிட் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய சுரங்கத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல, 59 லட்சம் டன் லித்தியம் படிமங்கள் ஜம்முகாஷ்மீரில் இருப்பது தெரியவந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் ஹைமானாதான் அந்த அதிர்ஷ்டக்கார கிராமம்.
    
வெள்ளியைப் போல வெள்ளை நிறத்தில் மினுமினுக்கும் ஒரு உலோகம்தான் லித்தியம். உலகின் மிகவும் லேசான உலோகங்களில் லித்தியம் முக்கியமானதாக கருதப்படுகிறது. உலகம் அளவில் அதிக தேவையுள்ள உலோகங்களில் ஒன்றாகவும் லித்தியம் விளங்குகிறது. காரணம் மின்சார வாகனங்களின் உருவாக்கத்தில் லித்தியம் முக்கிய பங்கினை வகிப்பதுதான். புவி வெப்பமடைதலை தடுக்க கார்பன்டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்களின் வெளியேற்றத்ததை கட்டுப்படுத்துவது சர்வதேச நாடுகளின் முன்பு உள்ள முக்கிய சவாலாக உள்ளது. பெட்ரோல், டீசல் போன்ற புதைம எரிபொருட்களை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் புவிவெப்பமடைதலை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் போன்றவற்றால் இயங்கும் வாகனங்களுக்கு பதில் பேட்டரியால் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதே இந்த பிரச்சனைக்கு முக்கியத் தீர்வாகவும் பார்க்கப்படுகிறது. புவிவெப்பமடைதலுக்கு காரணமான, சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் நச்சு வாயுக்கள் வெளியேற்றத்தை பூஜ்யம் ஆக்க ஒவ்வொரு நாடும் ஒரு இலக்கை வைத்து செயல்படுகிறது, அந்த வகையில் வரும் 2070ம் ஆண்டுக்குள் நச்சு வாயுக்கள் வெளியேற்றத்தை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என இந்தியாவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இயற்கை சீற்றங்களை ஏற்படுத்தும் புவிவெப்பமடைதலை தடுத்து சுற்று சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு முக்கிய அங்கமாக உலக நாடுகள் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த சூழலில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துவருதை கருத்தில் கொண்டு சீனா அதிக அளவில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

தற்போது மின்சார வாகனங்களின் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது சீனாதான். கடந்த 2021ம் ஆண்டு உலக அளவில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களில் 51.7 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டதுதான் என்றும் அந்த ஆண்டு மட்டும் சீனா 35,19,054 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. உலக அளவில் லித்தியம் படிமங்கள் அதிகம் உள்ள நாடுகளில் சீனா 4வது இடத்தில் உள்ளதும், லித்தியத்தை பிரித்தெடுக்கும் துறையில் அந்நாடு முன்னணியில் இருப்பதும் மின்சார வாகன உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் இருப்பதற்கான காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த துறையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பெற ஜம்முகாஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 59 லட்சம் டன் லித்தியம் படிமங்கள் மூலம் ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார வாகன உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது அதன் பேட்டரிதான். உற்பத்தி செலவில் கணிசமான அளவு இந்த பேட்டரிக்கான செலவாக கருதப்படுகிறது. அத்தகைய ரீசார்ஜபுள் பேட்டரிகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது லித்தியம். குறைந்த அளவிற்குள் அதிக மின் ஆற்றலை சேமித்து வைக்கும் திறன் கொண்டது என்பதால் ரீசார்ஜபுள் பேட்டரிகளை தயாரிக்க லித்தியம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பேட்டரிகளிலும் லித்தியத்தின் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் லித்தியம் பேட்டரிகளை இறக்குமதி செய்வதற்கான வரி குறைக்கப்பட்டது.

தற்போது ஜம்முகாஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மின்சார வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவை முன்னணி இடத்திற்கு கொண்டு வரும் நம்பிக்கையை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் லித்தியத்தை அதன் படிமத்திலிருந்து பிரித்தெடுப்பது மிகவும் சிக்கலான அதிக செலவு தரும் விஷயம் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஜம்முகாஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் படிமங்கள் எப்போது பிரித்தெடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்பது அடுத்தடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு பின்பே தெரிய வரும். வெள்ளை தங்கம் என வர்ணிக்கப்படும் லித்தியம் துணையோடு மின்சார வாகன உற்பத்தியில் சீனாவை இந்தியா வீழ்த்தி அத்துறையில் முதன்மை இடத்திற்கு செல்வது விரைவில் சாத்தியமாக வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!