இன்று முதல் 3 நாட்களுக்கு இலவசமாக தாஜ்மஹாலை சுற்றி பார்க்கலாம்!

முகலாய பேரரசர் ஷாஜஹானின் 368வது நினைவு தினத்தையொட்டி, இன்று 17ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை நுழைவு கட்டணமில்லாமல் இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இதுதொடா்பாக இந்திய தொல்லியல் ஆய்வு துறையின் மூத்த அதிகாரி ராஜ் குமார் படேல் கூறுகையில், ‘பிப்ரவரி 17, 18ம் தேதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க கட்டணம் வசூலிக்கப்படாது.
    
பிப்ரவரி 19ம் தேதி நாள் முழுவதும் இலவசமாக சுற்றி பார்க்கலாம்’ என்றார். 17,18ம் தேதிகளில் ஷாஜஹானின் அடக்கஸ்தலத்தில் சந்தனம், மலர்கள், போர்வைகள் வைப்பது போன்ற வழக்கமான நடைமுறைகள் நடைபெறும். 19ம் தேதி 1,880 மீட்டா் நீள போர்வை ஷாஜஹானின் அடக்கஸ்தலத்தில் போர்த்தப்படும். ஷாஜஹான், மும்தாஜை போற்றி கவாலி பாடல்கள் பாடப்படும்.
இந்த 3 தினங்களில் மட்டும் தாஜ்மஹாலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஷாஜஹான், மும்தாஜின் அடக்கஸ்தலத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!