ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மேலும் 12 சிறுத்தைகள் இன்று வருகை!

தென்னாப்பிரிக்காவிலிருந்து இன்று(பிப்.18) மத்தியப் பிரதேசத்தின் ‘குனோ’ தேசிய பூங்காவுக்கு மேலும் 12 சிறுத்தைகள் வந்து சேர்கின்றன. ஏற்கெனவே இந்த பூங்காவில் 8 சிறுத்தைகள் இருக்கும் நிலையில் புதிய சிறுத்தைகள் மூலம் இந்தியாவின் மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கை 20ஆக அதிகரிக்கும். இந்தியா சுதந்திரமடைந்த கொஞ்ச காலத்திலேயே சிறுத்தைகளும் இந்திய மண்ணை விட்டு மறைந்துவிட்டன. கடைசியாக 1947ம் ஆண்டு சத்தீஸ்கர் மகாராஜாவாக இருந்த ராமானுஜ் பிரதாப் சிங் தியோ மூன்று சிறுத்தைக் குட்டிகளை வேட்டையாடினார். இதனையடுத்து சிறுத்தைகளின் நடமாட்டம் எங்கும் காணப்படவில்லை. இதனையடுத்து கடந்த 1952ம் ஆண்டு அப்போதைய நேரு அரசாங்கம் இந்தியாவிலிருந்த மொத்த சிறுத்தைகளும் அழிந்துவிட்டதாக அறிவித்தது.
    
அதற்கு முன்னர் வரை சிறுத்தைகள் நன்கு செழித்து வளர்ந்ததா? என்று கேட்டால் கிடையாது என சொல்லலாம். மேற்குறிப்பிட்டதைப் போல இந்திய மகாராஜாக்கள் தங்களின் வீரத்தை பறைசாற்ற சிறுத்தைகளை கொன்று குவிக்க தொடங்கினர். மறுபுறம் மக்கள் தொகை பெருக்கம், வேட்டையாடும் நிலப்பரப்பு சுருங்கி போனது, போட்டி விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை சிறுத்தைகளின் வாழ்வை விளிம்பு நோக்கி வேகமாக நகர்த்தியது. இந்நிலையில் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்காக தென்னாப்பிரிக்காவுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஒப்பந்தத்தையடுத்து தென்னாப்பிரிக்காவிலிருந்து நிபுணர்கள் குழு ஒன்று கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் குனோ பூங்காவுக்கு வந்து ஆய்வு நடத்தியது. ஆய்வின் முடிவுகள் திருப்திகரமாக இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்து சேர்ந்தன. இந்த சிறுத்தைகளை அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த குனோ தேசிய பூங்காவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக திறந்து வைத்தார்.

இந்த சிறுத்தைகள் வாரத்திற்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வேட்டையாடி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இந்திய மண் மற்றும் காலநிலையை நன்கு புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல வாழ பழகிக்கொண்டது. இப்படி இருக்கையில் அடுத்த பேட்ஜ்ஜாக 12 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்படுகிறது. இதற்காக இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானம் கடந்த 16ம் தேதி அந்நாட்டிற்கு விரைந்திருக்கிறது.

இந்த விமானம் 12 சிறுத்தைகளை ஏந்திக்கொண்டு இன்று நாடு திரும்புகிறது. ஏற்கெனவே 8 சிறுத்தகளுக்கு குனோ பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இந்த சிறுத்தைகளுக்கும் 10 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தென்னாப்பிரிக்காவின் தேசிய பல்லுயிர் நிறுவனம், தேசிய பூங்காக்கள், அழிந்து வரும் வனவிலங்கு அறக்கட்டளை ஆகியவற்றுடன் இந்தியாவின் வனவியல், மீன்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழலியல் துறையால் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவுக்கும்-தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே இது குறித்து கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு 70 ஆண்டுகளுக்கு பின்னர் சிறுத்தைகள் வந்தாலும், இந்திய சூழலுக்கு முழுவதுமாக இச்சிறுத்தைகள் ஒன்றிபோகுமா? என்று கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆப்பிரிக்காவை போல இந்தியா வறட்சியான பூமி கிடையாது. பருவமழை ஓராண்டு தவறினாலும் அதற்கடுத்த ஆண்டு குறிப்பிட்ட அளவு பெய்துவிடும். எனவே இச்சிறுத்தைகள் கனமழையையும், அதனால் ஏற்படும் நோய் தொற்றையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!