கடும் பின்னடைவை எதிர்கொள்ளும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்!


பிரித்தானியாவில் கன்சர்வேட்டிவ் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரலாம் என்ற ரிஷி சுனக்கின் நம்பிக்கை தற்போது மக்கள் மன நிலையில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியானதில், ரிஷி சுனக் மீதான மக்கள் ஆதரவு என்பது, இதுவரை பதிவாகாத மிக குறைந்த அளவை தொட்டுள்ளது. பிரித்தானிய பிரதமரின் மக்கள் ஆதரவு என்பது தற்போது -22% என தெரியவந்துள்ளது.
    
கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து 6% மேலும் சரிவடைந்துள்ளது. அதுவே பிரதமராகவும் நிதியமைச்சராகவும் அவரது மிக குறைவான மக்கள் ஆதரவு சதவீதம் என கூறப்படுகிறது. பிரதமர் சுனக்கின் செயல்பாடுகளை வெறும் 24% மக்கள் மட்டுமே ஆதரித்துள்ளனர். சுமார் 46% மக்கள் ஏற்கவில்லை. இது மட்டுமின்றி, சுனக் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர், தொழில் கட்சியினரின் செல்வாக்கு மிகவும் உயர்ந்துள்ளது. பொதுத்தேர்தலில் Sir Keir Starmer கட்சியை ஆதரிக்க இருப்பதாக 51% மக்கள் கூறியுள்ளனர். ஆனால் வெறும் 24% மக்கள் மட்டுமே கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரித்துள்ளனர்.

வடக்கு அயர்லாந்து நெறிமுறை விவகாரத்தில் சொந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒருமித்த கருத்து ஏற்பட ரிஷி சுனக் போராடி வரும் நிலையிலேயே தொழில் கட்சி 27 புள்ளிகள் முன்னிலையை பதிவு செய்துள்ளனர். மட்டுமின்றி, அடுத்த மாதம் தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் வீட்டுபயோகப் பொருட்கள் மற்றும் வணிகங்களுக்கான வரி குறைப்பு கொண்டுவர வேண்டும் என்ற கடும் நெருக்கடியை பிரதமரும் நிதியமைச்சரும் எதிர்கொண்டு வருகின்றனர்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் பிரதமர் பொறுப்புக்கு வந்த ரிஷி சுனக்கால் இதுவரை தொழில் கட்சியினரின் செல்வாக்கை முறியடிக்க முடியவில்லை. மேலும், அடுத்த 6 மாதங்களில் பொதுத்தேர்தல் முன்னெடுக்கப்பட்டால், யாருக்கு உங்கள் வாக்கு என்ற கேள்விக்கு 40% வாக்காளர்கள் தொழில் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க இருப்பதாக கூறியுள்ளனர். வெறும் 14% மக்கள் மட்டுமே கன்சர்வேட்டிவ் கட்சியை ஆதரிப்பதாக கூறியுள்ளனர்.
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!