காதலுக்காக எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் இளம்பெண்: திருப்பி அனுப்பப்பட்ட சோகம்!

காதலுக்காக எல்லை தாண்டி வந்து, இந்தியரை திருமணம் செய்த 19 வயது பாகிஸ்தானிய பெண், சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். இந்தியா-நேபாளம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த அப்பெண்ணை ஞாயிற்றுக்கிழமை அட்டாரி-வாகா கூட்டு சோதனைச் சாவடி வழியாக திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    
ஆன்லைனில் லூடோ விளையாடும்போது பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முலாயம் சிங் யாதவ் (Mulayam Singh Yadav). அவருக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இக்ரா ஜுவானி (Ikra Jivani) என்ற இளம் பெண்ணுக்கும் ஆன்லைனில் லூடோ விளையாட்டு விளையாடும் போது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்தது. அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் ஒன்றாகக் கழிக்க முடிவு செய்தனர்.

முலாயம் பெங்களூரில் வசிப்பதால், அவருடன் சேர முடிவு செய்து விசாவுக்கு விண்ணப்பித்தார். ஆனால், விசா நிராகரிக்கப்பட்டதால், தனது காதலி இக்ராவை பாகிஸ்தானிலிருந்து நேபாளத்திற்கு வரவழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் முலாயம் சிங் யாதவ். பின்னர் நேபாள எல்லை வழியாக தனது காதல் மனைவி இக்ராவை இந்தியாவுக்கு அழைத்து வந்தார். இருவரும் செப்டம்பர் 28, 2022 அன்று பெங்களூரு வந்து சர்ஜாபூர் சாலைக்கு அருகிலுள்ள ஜுன்னசந்திராவில் வாடகை வீட்டில் குடியேறினர்.

தனது மனைவிக்கு Rava Yadav என்ற பெயரில் போலியாக ஆதார் அட்டையையும் முலாயம் சிங் வாங்கியுள்ளார். மேலும், அதனைக் கொண்டு பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பித்துள்ளார். இதனிடையே, மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில் ஜனவரி மாதம் 23-ஆம் திகதி பாகிஸ்தான் இளம்பெண்ணான இக்ராவை பெங்களூரு பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர் சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த இக்ராவை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த பெங்களூரு பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தகவல் அனுப்பினர். இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவின் பேரில் இக்ரா பெங்களூருவிலிருந்து அமிர்தசரஸ் வழியாக பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர், தனது காதல் கணவரை பிரிந்து அவர் பாகிஸ்தானுக்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!