சேவையில் ஈடுபட முடியாது! அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.அதன்படி குறித்த அரச ஊழியர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் கூறும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், அரச ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அவர்கள் மூன்று மாத காலம் சம்பளமில்லாத விடுமுறை என்ற அடிப்படையில் சேவையில் இருந்து இடை விலக வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணிகளினால் எதிர்வரும் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் தற்போது பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்படுகின்றன.

தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை அரச சேவையில் ஈடுபட முடியாது. தேர்தல் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையில் தான் அவர்கள் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இல்லை என்று குறிப்பிடவில்லை. தவிர்க்க முடியாத காரணங்களினால் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி அறிவிப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!