இந்திய மாநிலத்தில் தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் மசோதா நிறைவேற்றம்!

கர்நாடக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
    
அதன்படி, இனி தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படலாம் என்றும், தொழிலாளர்கள் தொடர்ச்சியாக நான்கு நாள்கள் 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் மூன்று நாள்கள் வார விடுமுறை எடுத்துக் கொள்ளவும் சட்ட திருத்த மசோதா வகை செய்கிறது.
பெண்களின் பணி நேரத்தில் ஒரு கட்டுப்பாடு இருப்பது மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறை அழுத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது என்று சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறைஅமைச்சர் மதுசுவாமி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14ன்படி, நாட்டில் அனைத்துப் பாலினருக்கும் சம பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாளைக்கு பணி நேரத்தை 9 முதல் 12 ஆக அதிகரித்தும், வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் பணி நேரம் இல்லாமலும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதனால் பணி வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!