ஆர்ப்பாட்டம் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் இதன் போது 28 பேர் காயமடைந்தமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
    
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஞாயிற்றுக்கிழமை தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு – கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்படாத நிலையில் அப்பகுதியில் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புரை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் இதன் போது 28 பேர் காயமடைந்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு , 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!