கச்சதீவில் புத்தர் சிலை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்!

கச்சதீவில் புத்தர் சிலை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது இல்லத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
    
அந்தத் தீவானது இலங்கைக்கு கையளிக்கப்பட்ட போது இலங்கை மீனவர்கள் மற்றும் இந்திய மீனவர்கள் அந்த தீவினை பாவிப்பதற்கும், அந்தத் தீவில் தமது விலைகளைக் காய வைப்பதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் அந்த தீவு பயன்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது.

அதுமட்டுமில்லாது அந்த தீவு என்பது ஒரு அந்தோனியர் கோயிலைக் கொண்டதாகவும் வருடம் ஒரு முறை அங்கு திருவிழா நடப்பதாகவும் ஒரு ஏற்பாடு தொடர்ந்து இருந்துகொண்டு வந்தது. எனவே அங்கு வேறு கட்டுமானங்கள் எவையும் கட்டப்படக்கூடாது என்று அவர்களது உடன்பாட்டில் எட்டப்பட்ட ஒரு விடயமாகவும் இருந்ததாக முன்னர் நாங்கள் செய்திகள் வாயிலாக அறிந்திருந்தோம்.

இந்த முறை நடந்த அந்தோனியார் திருவிழாவின் போது முதன் முறையாக பௌத்த பிக்குகளும் கடற்படையினரும் அங்கு சென்றதாக நாங்கள் அண்மையில் வெளியாகிய செய்திகள் மூலம் அறிந்து கொண்டோம்.

இதுவரை காலமும் குறிப்பிட்ட ஒரு அளவு கிறிஸ்தவ மக்கள் இந்தியாவில் இருந்தும் இலங்கையிலிருந்து செல்வதாக தான் இருந்தது. யாழ்ப்பாணம் பங்குத்தந்தை மதகுருமார் அந்த திருவிழாவை ஏற்படு செய்வது எனவும் இருந்தது. இப்போது முதன்முறையாக அந்தத் தீவில் ஒரு பௌத்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மிகவும் ரகசியமாக அந்த பௌத்த ஆலயம் கடற்படையினருடைய ஆதரவுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடற்படை இன்னும் ஒரு விடயத்தை செய்தது. அதாவது நெடுந்தீவில் இருந்த வெடியரசன் கோட்டை ஒரு பௌத்த சின்னம் என்று சொல்லியும் ஆகவே அங்கு பௌத்த சின்னங்களை எழுப்புவதற்கான நடவடிக்கையாக, அது ஒரு பௌத்த இடமென்ற பெயர் பலகையும் வைக்கப்பட்டதும் தெரிந்த விடயங்கள். ஆகவே இலங்கை அரசாங்கத்தை பொருத்தவறையில் மிக வேகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பௌத்த மயமாக்கும் செயறிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

அது இப்பொழுது இந்தியாவிற்கு மிகவும் அண்மித்த, அத்துடன் ஒரு காலத்தில் இந்தியாவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அந்த தீவும் கூட. அங்கு பௌத்த மக்கள் வாழாத அல்லது செல்லாத மண்ணில் பௌத்த கோயில் ஒன்றை கட்டுவது என்பது மிக தீவிரமான பௌத்த மயமாக்கலை அவர்கள் செய்கிறார்கள் என்பதன் வெளிப்பாடுதான் இது.

இந்திய அரசாங்கமும் வெறுமனே ஒரு பார்வையாளராக இருந்து கொண்டு இவ்வாறான நிலைமைக்கு இலங்கைக்கு அனுமதி அளிக்குமாக இருந்தால் இந்தக் கச்சதீவு என்பது இந்தியாவிற்கு ஒரு பாதுகாப்புக்கு எதிரான இடமாக மாற்றப்படாது என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லை.

ஆகவே இலங்கை அரசாங்கம் எதையும் செய்துவிட்டு போகட்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தால் இது ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்தியாவிற்கான பாதிப்பையே ஏற்படுத்தும்.

95 சதவீதம் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் அரசாங்கம் மிகப் பெரும் இடங்களில் பௌத்த ஆலயங்களை கட்டுவதும் அங்கு சிங்கள குடியேற்றங்களை கொண்டு வருவதுமான நடவடிக்கைகள் உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்திய அரசும் இதற்கான நடவடிக்கைகளை முழுமூச்சுடன் எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியா மீது உள்ள நம்பிக்கையும் கேள்வி குறியாக்கப்படும். இந்தியா இந்தியா பாராமுகமாக இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமாக நடக்கிறதா என்ற ஐயம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.

இந்தியா எந்த விதமான நடவடிக்கைகளை எடுக்காமல் ஒரு பார்வையாளராக இருக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் இந்தியா மீது ஒரு வெறுப்பு மாத்திரமல்ல நம்பிக்கையீனங்கள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கும் – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!