சிங்கள பெரும்பான்மையின் அரசாங்கமே இன ரீதியான ஆட்சி செய்கிறது: யாழ்.பல்கலை மாணவரின் கேள்விக்கு விக்கி பதில்!

யாழ். பல்கலைக்கழக மாணவரொருவரின் கேள்விக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதில் வழங்கியுள்ளார்.
இன ரீதியான ஆட்சி என்றால் என்ன? ஜனநாயகத்திற்கு இந்த ஆட்சி முரண்பாடுடையதா? இலங்கையில் இனரீதியான ஆட்சி நடக்கின்றதா? பதில் – இதே கேள்வி கொழும்பில் இருந்தும் கேட்கப்பட்டது. அதற்கு ஆங்கிலத்தில் நான் பதில் அளித்து அண்மையில் டெய்லி டெலிகிராவ் என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது. இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.

முதலில் மக்களாட்சி, (ஜனநாயகம்) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். மக்களாட்சி அல்லது ஜனநாயகம் (Democracy) என்பது மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கமாகும். மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் ஆட்சியே மக்களாட்சி என்றார் ஏபிரகாம் லிங்கன். மக்களாட்சியில் சட்ட சமத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறைகள் ஆகியன முக்கியமாக இடம் பெறுவன. மக்களாட்சியில் ஒவ்வொரு குடிமகனின் வாக்குக்கும் சமமான எடை உள்ளது. மக்களாட்சியில் மூன்று முக்கிய அடிப்படைக்கோட்பாடுகள் பாதுகாக்கப்படுகின்றன.

1. உயர்ந்த கட்டுப்பாடு. அதாவது அதிகாரத்தில் மிகவும் குறைந்த அளவிலான இறையாண்மை காட்டுவது.
2. அரசியல் சமத்துவம்
3. தனி நபர்களும் நிறுவனங்களும் சமூக நெறியாக மேற்படி கட்டுப்பாட்டையும் சமத்துவத்தையும் தம் வாழ்வில் கடைப்பிடித்தல்.
மக்களாட்சிக்கான Democracy என்ற ஆங்கிலச் சொல் Demos மற்றும் Kratos என்ற இரு கிரேக்க சொற்களில் இருந்து வந்தது. (Demos – மக்கள் Kratos – ஆட்சி அல்லது அதிகாரம்).

ஆனால், இன ரீதியான ஆட்சியே Ethnocracy எனப்படும். சர்வதேச இஸ்ரேலிய நிபுணரான பேராசிரியர் யிவ்டசெல் அவர்கள் எமது காணி அபகரிப்பு கருத்தரங்கத்தில் ஒரு முக்கிய கருத்தை சில வருடங்களுக்கு முன் வெளியிட்டார். அவர் புவியியல், நகர ஆராய்ச்சி போன்றவற்றில் உலகறிந்த நிபுணர். அவரே இரு தசாப்தங்களுக்கு முன்னர் இன ரீதியான ஆட்சி செலுத்தும் நாடுகள் பற்றி முதன் முதலில் தமது கருத்தை வெளியிட்டார்.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெரும்பான்மை சிங்கள அரசாங்கங்களினால் இலங்கையில் நடைபெற்ற காணி அபகரிப்பை ஆராய்ந்து இலங்கையும் இஸ்ரேல் போன்று ஒரு இன ரீதியான ஆட்சி செலுத்தும் நாடு என்று முடிவெடுத்தார். (Ethnocracy). இந்தக் கருத்து முக்கியமானது.

முக்கியமாகத் தமிழ் மக்களுக்கு எதிராகவும் அண்மையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் தொடர்ந்து வரும் சிங்களப் பெரும்பான்மையின் அரசாங்கங்கள் இன ரீதியான ஆட்சியையே செலுத்தி வருகின்றன.
ஒரு அரசாங்கத்தின் நிறுவன செயற்பாடுகளைத் தனது நலவுரித்துக்கள், அதிகாரங்கள், வளங்கள் ஆகியனவற்றின் மேம்பாட்டுக்காக ஒரு ஆதிக்கமுள்ள இனக் கூட்டமானது வழிநடத்த ஏற்படுத்தும் ஒரு அரசியல் ரீதியான அமைப்பே இன ரீதியான ஆட்சி முறை. இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த நாட்களிலிருந்தே சிங்கள அரசியல் வாதிகள் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

பிரித்தானியர் காலத்தில் வட கிழக்கிற்கு வெளியில் வாழ்ந்து வந்த தமிழ் மக்களை அடித்துத் துரத்த, சுதந்திரம் கிடைத்த உடனேயே நடவடிக்கைகள் எடுத்தார்கள். தற்போது சுமார் 15 இலட்சம் பேர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இப்போது அவர்கள் தமிழ் மக்களைத் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டத் திணைக்களங்கள் மார்க்கமாக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள். இந்த நாட்டை சிங்கள பௌத்த நாடாக மாற்றவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்.

வழக்கமாக இனரீதியான ஆட்சியாளர்கள் இனப்படுகொலைகளில் ஈடுபடுபவர். இலங்கையிலும் அதுவே நடந்து வந்துள்ளது. இதனை மனதில் வைத்தே 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியன்று வடமாகாண சபையில் இனப்படுகொலைப் பிரேரணையை முன் வைத்து எமது உறுப்பினர்கள் அனைவரும் அதை ஏகோபித்து ஏற்றுக்கொள்ள நடவடிக்கைகள் எடுத்தேன்.
தற்போது பார்க்கையில் அதை ஏற்றுக்கொள்ளச் செய்து ஏற்ற பிரேரணையை ஐக்கிய நாடுகளுக்கு அனுப்பிய காரணத்தினால்தான் “மாகாண சபைகள் எமக்கு வேண்டாம்” என்ற எண்ணத்தில் தொடர்ந்து வந்த சிங்களப்பெரும்பான்மை அரசாங்கங்கள் செயற்படுகின்றனவோ என்று யூகிக்க வேண்டியுள்ளது.

2018 அளவில் இருந்து மாகாண சபைகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்தியாவை மனம் குளிர வைக்கவே 13ஐ நடைமுறைப்படுத்துவோம் அதற்கு மேலும் போவோம் என்று கூறி வருகின்றார்கள் போல் தெரிகிறது. எங்கே தாங்கள் செய்த கொடுமைகளை மாகாணசபைகள் உலகறியச்செய்து விடுவனவோ என்ற பயம்தான் 13ஐ நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கின்றது என்று யூகிக்க இடமிருக்கின்றது.

13ஐ நடைமுறைப்படுத்தாதீர்கள் என்று மகாநாயக்க தேரர்களைச் சொல்ல வைத்ததும் அரசியல்வாதிகளே என்று நினைக்கின்றேன். இல்லை என்றால் எனது வெளிப்படையான சிங்களத்திலான மொழி பெயர்ப்புடன் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு எந்த விதமான பதிலும் அனுப்பாமைக்குக் காரணம் வேறேதும் இருக்க முடியாது.

13ஆவது திருத்தச்சட்டம் பற்றி எதுவுமே அறியாத மகாநாயக்க தேரர்கள் அதை நடைமுறைப்படுத்தாதீர்கள் என்று கூறியமை நகைப்புக்கு இடமாக அமைந்துள்ளது.
இன்று தமிழர்கள் தொடர்ந்து 3000 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. சிங்கள மொழி வழக்கிற்கு வந்ததோ இன்றிலிருந்து 1400 வருடங்களிற்கு முன்னர்தான். அதற்கு முன் சிங்களவர்கள் என்று ஒரு இனமோ சிங்களம் என்ற மொழியோ இருக்கவில்லை.

மகாவம்சம் கூட சிங்கள மொழியையோ இனத்தையோ பற்றி எதுவும் கூறவில்லை. குறித்த நூல் பாளி மொழியிலேயே எழுதப்பெற்றது. அப்படியிருந்தும் 2500 வருடங்களுக்கு மேலாக சிங்கள மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வந்திருப்பதாகப் பொய்யையும் புரட்டையம் உலாவ விட்டுள்ளார்கள் சிங்கள சரித்திராசிரியர்கள்.

சரித்திர ரீதியாக தமக்குப் பல தடங்கல்கள் இருப்பதை உணர்ந்துதான் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து தமிழர்களை இந்த நாட்டில் இருந்து விரட்ட வெளிப்படையான மற்றும் அந்தரங்க நடவடிக்கைகளில் சிங்கள அரசியல்வாதிகள் ஈடுபட்டு வந்துள்ளனர். கலகங்களை உருவாக்கி தமிழர்களைத் தமது வாசஸ்தலங்களிலிருந்து விரட்டியடிப்பதற்கு மேலதிகமாகவே அரச சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்து வந்த சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளன.

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் அரச சிங்கள குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதன் காரணமே மேற்கூறிய இனரீதியான ஆட்சியின் மனோநிலையே. தமிழர்களை விரட்டும் நடவடிக்கைகள் சிங்கள அரசியல்வாதிகளாலும் உயர் மட்ட அரச அலுவலர்களாலும் நன்றாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

குடியேற்றங்களில், குடியேற்ற இடங்களில் வசிக்கும் மக்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் அல்லது அந்தப் பிரதேச அல்லது மாவட்ட மக்களுக்கே குடியேற்றத்தில் கலந்து கொள்ளும் உரிமை கொடுக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல! குடியேற்றக்காரர்கள் அந்தப் பிரதேச இன மக்களின் ஒரே இனத்தவராக இருக்க வேண்டும்.

இவ்வாறான சர்வதேச சட்ட கோட்பாடுகளை மீறும் விதமாகவே சிங்கள குடியேற்றங்கள் தமிழரின் தாயகப் பிரதேசத்தில் தற்போது நடைபெற்ற வருகின்றன. இவை சம்பந்தமாக நாங்கள் காணொளிகளை மும்மொழிகளிலும் உருவாக்கியுள்ளோம். தகுந்தவர் கேட்டால் கஸட்கள் அனுப்பப்படுவன. இவ்வாறான குடியேற்றங்களினூடு காலாகாலத்தில் அவர்கள் வாழ்விடங்களிலேயே தமிழ் மக்களைச் சிறுபான்மையோர் ஆக்க வேண்டும் என்ற இன ரீதியான சிந்தனையே அவர்களை இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடச்செய்துள்ளது.

அவர்களின் மிக அண்மைய நடவடிக்கைகளே குருந்தூர் மலையிலும் வெடுக்கு நாறி மலையிலும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் ஆவன. தொல்பொருள் திணைக்களம் வடகிழக்கில் பௌத்தம் இருந்ததற்கான சான்றுகள் இருந்ததாகக் கூறி பிற மத வணக்கஸ்தலங்களை அழித்து வருகின்றார்கள். முக்கியமாக இந்து மக்களின் வணக்கத் தலங்களும் சிலைகளுமே அவர்களின் இன ரீதியான வெறியாட்டத்திற்கு ஆளாகியுள்ளன.


நெடுங்கேணி வெடுக்குநாறி மலையிலிருந்த ஆதிலிங்கேஸ்வரர் கோயிலின் மூலவர் திருடப்பட்டுள்ளார். மற்றைய சிலைகளும் திருடப்பட்டுள்ளன அல்லது சிதைக்கப்பட்டுள்ளன. அந்த இந்துக் கோவில் இருந்த இடத்தில் வட்டமான பர்வத விகாரை உருவாக்கப்பட்டு கூகிளிலும் குறித்த பௌத்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக எமது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் 2000 வருடங்களுக்கு முன்னர் ஏதோ ஒரு பௌத்த வணக்கஸ்தலம் குறித்த இடங்களில் இருந்திருக்கக்கூடும். ஆனால் அந்தக்கால கட்டத்தில் சிங்கள மொழியோ இனமோ இன்னமும் உருவாகவில்லை. கி.பி 6ம், 7ஆம் நூற்றாண்டுகளில்தான் சிங்கள மொழி, தமிழ் – பாளி மொழிகள் சேர்க்கையால் பிறந்தது.

அந்த மொழியைப் பேசியவர்களே சிங்களவர்கள். கி.பி 6ம், 7ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த உலகத்தில் சிங்களம் என்ற மொழியோ சிங்களவர் என்ற இனமோ இருந்ததில்லை. இப்பொழுது தமிழ் பௌத்தர்களால் வழிபட்ட புத்த ஆலயங்கள் நவீன சிங்கள பௌத்தர்களின் ஆலயங்களாகப் புனர்நிர்மாணம் பெற்று வருகின்றன.

சில காலத்திற்கு முன்னர் ஒரு ஆணைக்குழு இலங்கையின் புராதன வணக்கத்தலங்களையும் இடப் பெயர்களையும் வகைப்படுத்தித் தயாரித்தது. பெருவாரியான இந்து ஆலயப் பெயர்களை எடுத்து வைத்து தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களின் பெயர்களையும் எடுத்து வைத்து அந்த ஆணைக்குழு அவற்றிற்கு சிங்களப்பெயர்களை இட்டது.

மிகப் பிரபல்யமான ஒரு உதாரணமே மணல் ஆறு என்ற புராதன தமிழ் கிராமம் வலி ஓயா என்ற சிங்களப் பெயரைப் பெற்றமை. சிலகாலம் வாளாதிருந்து விட்டு தற்போது குறித்த சிங்களப் பெயர்களே அந்தந்த இடத்தினதும் புராதனப் பெயர்கள் என்றும் சோழர் காலத்தில் தமிழர்கள் தமிழ்ப்பெயர்களைச் சிங்களக் கிராமங்களுக்கு வைத்தனர் என்றும் புரளியைக் கிளப்பி சிங்கள மக்கள் அதனை நம்ப வழி செய்துள்ளனர்.

இவ்வாறான இன ரீதியான ஆட்சியின் பிரதிபலனே இன்று வடகிழக்குத் தமிழர்கள் தமது புராதன வாழ்விடங்களை இழக்கும் ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. தமிழர்களே இந்நாட்டின் மூத்த குடிகள். பௌத்தம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட போது சிங்கள மொழியோ இனமோ இருந்ததில்லை. தற்போது வடகிழக்கில் காணப்படும் பௌத்த சின்னங்கள் தமிழ் பௌத்தர்கள் காலத்தவை.

(தெமள – பௌத்தையோ என்ற பேராசிரியர் சுனில் ஆரியரத்ன எழுதிய சிங்கள நூலைப் பார்க்கவும்.) பிழையான வழியில் தம்மைத் தமது சிங்கள அரசியல்வாதிகளும் சில சிங்கள புத்தி ஜீவிகளும் இதுவரை வழிநடத்தி வந்துள்ளார்கள் என்பதைச் சிங்கள மக்கள் என்று உணர்ந்து கொள்கின்றார்களோ அன்றுதான் இந்த நாட்டில் சமாதானம், சகோதரத்துவம், சமரசம் ஆகியன உதிப்பன.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!