நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்!

அரசாங்கம் கொண்டு வரவுள்ள, பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுமாயின் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
    
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தை ஆராய்வதற்காக சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழுவொன்றை சங்கம் ஏற்கனவே நியமித்துள்ளதாக அதன் புதிய தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தை ஆராய்வு செய்வதற்கான குழு ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் அதன் அடிப்படையில் எந்தவொரு சட்ட நடவடிக்கைகளையும் தாங்கள் தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக சம்பந்தப்பட்ட குழு கண்டறிந்தால், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் என்ற புதிய சட்டமூலம் மார்ச் 23 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில், இது தற்போதைய 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திறம்பட நீக்கித் திருத்துஞ் சட்டமூலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காலத்திலிருந்தே சிவில் சமூகம் மற்றும் சட்ட நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!