கனடாவில் காந்தி சிலைகள் சேதம்!

மகாத்மா காந்தியின் சிலைகளைக் குறிவைத்து நாசப்படுத்துதல் தொடர்பாக கனேடிய அரசிடம் இந்தியா குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. கனடாவின் ஒட்டாவாவிலுள்ள இந்திய தூதரகம் மகாத்மா காந்தியின் சிலை தொடர்ந்து சேதப்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டை கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
    
பிரித்தானிய கொலம்பியாவின் பர்னபியிலுள்ள சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிற்பத்தின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் கடந்த திங்கட்கிழமை நடந்தது.
கடந்த மார்ச் 23 அன்று, ஒன்ராறியோவில் உள்ள சிட்டி ஹாலில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை சிதைக்கப்பட்டு, அதன் தளத்திற்கு அருகே இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக எழுதப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து ஹாமில்டன் காவல்துறையின் வெறுப்புக் குற்றப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

2022 ஆண்டு ஜூலை மாதம், ரிச்மண்ட் மலையில் உள்ள விஷ்ணு மந்திரில் அமைந்துள்ள மற்றொரு சிலையும் சிதைக்கப்பட்டது. அதன் பின் கோயிலின் அமைதிப் பூங்காவில் 20 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டது.

பர்னபியில் உள்ள காந்தி சிலையில் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரும் வகையில் கனேடிய காவல்துறை பிரத்யேக தகவல் திட்டத்தை அமைத்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை, “Simon Fraser பல்கலைக்கழகத்தில் சிலையை சேதப்படுத்திய சம்பவம் நடத்திய குற்றவாளிகள் பற்றிய தகவலை தெரிவிக்க ஒரு சிறப்பு தொலைபேசி எண்ணை உருவாக்கியுள்ளதாக” தெரிவித்துள்ளது.

பர்னபி பொலிஸார் கடந்த செவ்வாயன்று நாசவேலை குறித்த விசாரணையைத் தொடங்கியது. “எங்கள் புலனாய்வாளர்களுக்கு உதவக்கூடிய தகவல்களைக் கொண்டவர்கள் இருப்பதாக நாங்கள் நம்புவதால், பொதுமக்களிடமிருந்து உதவிக்காக நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்,” என்று காவல்துறை அதிகாரி மைக் கலஞ்ச் கூறியுள்ளார். மார்பளவு தலை துண்டிக்க ஏதாவது ஒரு கருவி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “கடந்த காலங்களில் கனடாவின் பிற பகுதிகளில் காந்தி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்பதை பர்னபி ஆர்சிஎம்பி அறிந்திருக்கிறது” என்றும் “இந்த சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் கவனித்து வருவதாகவும்” பொலிஸ் அதிகாரி கலஞ்ச் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பிரிவினைவாதக் குழுவான சீக்கியர்களின் நீதிக்கான பஞ்சாப் பொது வாக்கெடுப்புடன் சிலரால் அவர்கள் தொடர்புப்படுத்தப்பட்டாலும், கனேடிய சட்ட அமலாக்க அமைப்பு இன்னும் அந்த தொடர்பை நிறுவவில்லை.

இதற்கு முன்னரும் வட அமெரிக்காவில் மகாத்மாவின் சிலைகள் குறிவைக்கப்பட்டன. கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஒன்று நியூயார்க்கில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சம்வங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!