பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடா கனடா?

கனடாவில் பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு எதிரான வன்முறை அல்லது கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் பெண் அல்லது சிறுமி ஒருவர் கொல்லப்படும் மிக மோசமான சூழல் இருப்பதாக புதிய ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
    
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கனடாவில் 850 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 2019 மற்றும் 2022 க்கு இடையில் ஆண்களால் பெண்கள் கொல்லப்படுவது 27 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த கொலைகளில் 82 சதவீதம் ஆண்களால் நேர்ந்துள்ளது எனவும் 18 சதவீதம் பெண்களாலையே பெண்கள் கொல்லப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

24 முதல் 34 வயதுக்கு உட்பட்ட பெண்களே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணால் கொல்லப்பட்ட பெண்ணின் சராசரி வயது 42-ஆக உள்ளது, ஆனால் ஆணின் சராசரி வயது 37 என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆணால் கொல்லப்பட்ட ஐந்து பெண்களில் ஒருவர் பூர்வகுடியினர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், மொத்தம் 868 குழந்தைகள் தற்போது தாய் இல்லாமல் அநாதையாகியுள்ளனர்.

கனேடிய நிர்வாகம் பெண்கள் கொலை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!