அமெரிக்காவிடம் இருந்து சிறிலங்காவுக்கு கொடையாக கிடைக்கிறது மற்றொரு போர்க்கப்பல்

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, சிறிலங்கா கடற்படைக்கு அடுத்தமாதம் கொடையாக வழங்கப்படவுள்ளது.

1967ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது.

378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பல் தற்போது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்கிறது.

அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய இந்தப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுகின்ற போதிலும், இதனைப் பழுதுபார்க்கும், உதிரிப்பாக செலவுகளுக்கான கொடுப்பனவுகளைச் செலுத்த வேண்டும்.

ஹவாயில் தரித்திருக்கும், ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’, போர்க்கப்பலின் உலங்குவானூர்தி இறங்கு தளத்தில் வரும் ஓகஸ்ட் 22ஆம் நாள், நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில், இந்தப் போர்க்கப்பலை அதிகாரபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

எனினும், 2019 பெப்ரவரி வரையில் இந்தக் கப்பல் ஹவாயிலேயே தரித்து நிற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போர்க்கப்பலில் பணியாற்றுவதற்கான பயிற்சிகள் தற்போது சிறிலங்கா கடற்படையினருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கு 30 சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர்.

வரும் ஓகஸ்ட் 22 ஆம் நாளுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்படும். ஹொனொலுலு துறைமுகத்தில் இருந்து இந்தப் போர்க்கப்பல் புறப்படும் போது, சிறிலங்கா கடற்படையினரின் எண்ணிக்கை 130 வரை அதிகரிக்கும்.

போருக்குப் பிந்திய கால பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா கடற்படைக்கு பாரிய போர்க்கப்பல்கள் தேவைப்படுவதாக சிறிலங்கா கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“200 மைல் சிறப்பு பொருளாதார வலயத்தில் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள எமக்கு பெரிய கப்பல்கள் தேவைப்படுகின்றன. இந்த மூலோபாயத்தின் ஒரு கட்டமாகவே அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் பெறப்படுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா கடற்படைக்கு கையளிக்கப்படவுள்ள ‘யுஎஸ்சிஜி ஷேர்மன்’ போர்க்கப்பல், வியட்னாம் போரின் போது சிறப்பாகப் பணியாற்றி, எதிரிப் போர்க்கப்பல்களை மூழ்கடித்திருந்தது. இதற்காக தங்க கழுகு விருதும் இந்தக் கப்பலுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2004ஆம் ஆண்டு அமெரிக்கக் கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட ‘யுஎஸ்சிஜி கரேஜஸ்’ என்ற போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்கு, கொடையாக வழங்கப்பட்டிருந்தது.

சிறிலங்கா கடற்படையில் ‘எஸ்எல்என்எஸ் சமுத்ர’ என்ற பெயருடன் இயங்கும் இந்தப் போர்க்கப்பல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் , ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!