கருணாநிதி உடல்நிலை மோசமடைந்ததால் நள்ளிரவில் பதற்றம் – பாதுகாப்பு அதிகரிப்பு

திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் உடல் நிலை நேற்று இரவு மோசமடைந்ததை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மு.கருணாநிதிக்கு நோய்த்தோற்று ஏற்பட்டதை அடுத்து, கடந்த சனிக்கிழமை அதிகாலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரது உடல் நிலையில் அவ்வப்போது, முன்னேற்றங்கள் ஏற்படுவதும், பின்னடைவு ஏற்படுவதுமாக இருந்து வருகிறது.

நேற்றிரவு மீண்டும் கருணாநிதியின் உடல் நிலை மோசமான நிலையை அடைந்தது. இதனால் திமுக தொண்டர்கள் மருத்துவனை முன்பாக கூடினர். பலர் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்தை காண முடிந்தது.

திமுக தொண்டர்கள் பதற்றமான நிலையில் கூடியதால், காவல்துறையினர் நள்ளிரவில் தடியடி நடத்தினர்.

கருணாநிதி தொடர்பாக வதந்திகளும் உலாவி வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1.2 இலட்சம் காவல்துறையினர் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் மாத்திரம், 22 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, திமுக தொண்டர்களை அமைதி காக்கும்படி, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, கருணாநிதியின் உடல்நிலையில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் பின்னடைவு மருத்துவர்களின் முயற்சியால், சீரடைந்து வருவதாக மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!