இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட டெங் போகிங்

சீன வெளிநாட்டு உதவி நிறுவனமான, சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் துணைத் தலைவர் தூதுவர் டெங் போகிங் கடந்த வாரம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை டெங் சந்தித்திருந்தார். 

சீன – இலங்கை இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல், இரு நாடுகளின் நடைமுறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியை கூட்டாக நடைமுறைப்படுத்தல் தொடர்பாக ஆழமான கலந்துரையாடல்களை அவர் மேற்கொண்டிருந்தார். 

அவசர மனிதாபிமான உதவி, திறன் மேம்பாடு, மீனவர்களுக்கான பல்வேறு ஆதரவு, தொடருந்து மேம்பாடு போன்றவற்றில் சீன அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் குறித்து இதன்போது இலங்கை தரப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் சமூக மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவும் முக்கியமான பகுதிகள் குறித்த முக்கிய ஒப்பந்தங்களில் இரண்டு தரப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!