தமிழகம் முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது!

இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், அரசால் அங்கீகரிக்கப்படாமல் மாற்று மருத்துவ முறையில் டாக்டராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் இதுபோல் டாக்டர் தொழில் செய்பவர்கள் மீது, சுகாதார துறை இணை இயக்குனர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும், டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
    
10 நாளில் 72 பேர் கைது அதன் பேரில் தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 72 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 12 போலி டாக்டர்கள் கைதாகி உள்ளனர். தஞ்சாவூரில் 10 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், சேலத்தில்- 6, புதுக்கோட்டை, தேனியில் தலா 5 போலி டாக்டர்களும் கைது நடவடிக்கையில் சிக்கி உள்ளனர்.

கடலூர், அரியலூர், திருவண்ணாமலையில் தலா 4 போலி டாக்டர்கள் கைதில் மாட்டி உள்ளனர். பெரம்பலூர், நாகப்பட்டினம், விழுப்புரத்தில் தலா 3 பேரும், தர்மபுரியில் 2 பேரும், மதுரை, சிவகங்கை மற்றும் கரூரில் தலா ஒரு போலி டாக்டரும் கைதாகி இருக்கிறார்கள். மேற்கண்டவாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் சிக்கவில்லை திருச்சி, கோவை, சென்னை போன்ற பெருநகரங்களில் போலி டாக்டர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் போலி டாக்டர்கள் போலீஸ் வலையில் இதுவரை மாட்டவில்லை. ஆனால் கைது நடவடிக்கை தொடர்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!