கிளிநொச்சியை பௌத்த பூமியாக மாற்ற காத்திருக்கும் ஆளுனர்! – முதலமைச்சர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதாகவும், வடமாகாண சபை கலைக்கப்பட்ட பின் இந்த திட்டத்தை ஆளுநர் நிறைவேற்றி வைப்பார் என்றும், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரி சட்ட மாணவர் இந்து மகா சபையின் நக்கீரம் இதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

பல வருடங்களின் பின் சட்டக் கல்லூரி நிகழ்வொன்றில் பங்குபற்றுகின்றேன். உங்கள் நக்கீரம் இதழுக்கு வருடா வருடம் கட்டுரைகள் எழுதி அனுப்பிய காலம் இருந்தது. அரசியலுக்குள் நுழைந்ததும் என்னை அறிவுடையோர் பட்டியலில் இருந்து நீங்கள் அவிழ்த்து விட்டீர்களோ அல்லது நானாகவே கழன்று கொண்டேனோ நினைவில்லை! என்னுடைய முதல் ஐந்தாண்டு அரசியல் வாழ்க்கை முடியுந்தறுவாயில் என்னை நீங்கள் அழைத்ததில் இருந்து மீண்டும் என்னை அறிவுடையோர் பட்டியலுக்குள் ஏற்கச் சித்தமாய் இருக்கின்றீர்கள் என்பது புலனாகியுள்ளது.

நான் சட்ட மாணவர் தலைவராக இருந்த வருடத்தில் தான் அதாவது 1963ல்த் தான் உங்கள் இந்து மகா சபை உதித்தது. சாவகச்சேரியில் பின்னர் சட்டத்தரணி தொழிலை பார்த்த ஏ.மயில்வானகம் என்ற அப்போதைய சட்ட மாணவரே உங்கள் முதல்த் தலைவராக இருந்தார். செயலாளராக இருந்தவர் தி.யோகநாதன் அவர்கள். நான் சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக இருந்த காலத்தில் இருவரும் என் முன்னிலையில் வழக்குகளில் ஆஜராகி இருந்தனர். இப்பொழுது இருவருமே எம்முடன் இல்லை.

அன்றைய காலத்தையும் உங்களையும் இணைக்கும் பாலமாக நான் என்னைக் காண்கின்றேன். இவ்வாறு இணைக்கும் காலகட்டத்தையே வரலாறு என்ற கண் கொண்டு பார்ப்பார்கள் அறிஞர்கள். சரித்திரம் என்ற பாடம் எமது மாணவ பருவத்தில் எமது பாட விதானத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாம் இலத்தீன் மொழி படித்தோம். சிலர் இலத்தீனையும் கிரேக்க மொழிகளையும் படித்தார்கள். சிலர் சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளைத் தத்தமது தாய் மொழிகளுடன் சேர்த்துக் கற்றார்கள். அம் மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் வரலாற்றையே முதன்மைப்படுத்தின. இவற்றைவிட புராதன இலங்கையின் வரலாறு, நவீன இலங்கையின் வரலாறு, ஐரோப்பிய வரலாறு என்று சரித்திரம் பல பாடங்களாகக் கற்பிக்கப்பட்டது.

ஆனால் 1960களில் படிப்படியாக சரித்திரம் பற்றிய அறிவு குறையத் தொடங்கியது. அதற்குப் பதிலாக மாணவ மாணவியரிடையே விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவை முதன்மை பெறத் தொடங்கின. காரணம் சரித்திர அறிவு, மொழியறிவு போன்றவை விரைவானதும் வளமானதுமான வேலை வாய்ப்பைப் பெற்றுத்தர முடியாது போனமையே. வெள்ளையர் காலத்தில் மூன்று ‘R’ கள் பயிற்றப்பட்டன. வாசித்தல் (Reading), எழுதுதல் (Writing), மற்றும் எண்கணிதம் (Arithmetic) ஆகியனவே அவை. அந்தப் பாடங்களில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான் இலிகிதர்களாக வெள்ளையர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு வேலையும் பெற்றுக் கொடுக்கப்பட்டது. காலம் போகப் போக மூன்று ‘சு’ கள் போதாமல் போயிற்று. வரலாறும் தேவையற்றதாகிவிட்டது. 1966ல் 17507 பேர் மேல் வகுப்புகளில் சரித்திரம் படித்திருந்தார்கள் எனின் 1990ல் 1981 பேரே சரித்திரம் படிக்க முன்வந்தார்கள்.

இப்பொழுது எத்தனை பேர் சரித்திரத்தை ஒரு பாடமாக மேல்படிப்புக்கு ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்று நான் அறியேன். ஆனால் இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரையிலான கால சரித்திரத்தை எத்தனை பேர் அறிவார்கள் என்பது தான் என்னுடைய கேள்வி.அவற்றை ஏன் அறிய வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். எமது பாரம்பரியம் பற்றி, வரலாறு பற்றி, சரித்திரம் பற்றி சரியாகவோ தவறாகவோ நாம் அறிந்திருக்கும் அறிவு தான் எம்மை மறைமுகமாக இன்றும் ஆட்டிப்படைக்கின்றன. அந்த அறிவு தவறுடையதாக இருந்தால் நாம் மற்றவர்களால் வழிநடத்தப்படுவோம்.

அத்துடன் மற்றவர்களின் சரித்திரம் குறைகள் உடையதாக இருந்தால் அவற்றின் குறைகளை மறைத்துத் தம்மைப் பற்றிய தவறான கருத்துக்களை அவர்கள் பரப்பச் செய்ய எமது அசட்டையினம், அறிவின்மை உதவி புரிவன. இன்று அது தான் இந்த நாட்டில் நடைபெறுகின்றது. எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வழிவகுத்துள்ளது.ஆகவே வரலாறு பற்றிய அறிவு எமது மாணவ மாணவியர்க்கு மிகவும் அவசியம் என்பதையே எடுத்துச் சொல்ல வருகின்றேன். அதைப் பாடமாகப் படிக்காவிடினும் உங்கள் பரந்த அறிவினுள் பகுதியாகவேனும் புகுத்தி வைத்தல் நன்மை பயக்கும் என்று நம்புகின்றேன்.

1948 தொடக்கம் இன்று வரையில் 70 வருடங்களுக்கு இலங்கையில் நடைபெற்றவையும் வரலாறே. அது அரசியலாக இருக்கலாம்; சமூகவியலாக இருக்கலாம்; பொருளாதாரம் பற்றியதாக இருக்கலாம். இந்த காலகட்டத்தின் ஒரு பார்வையாளராக நான் இருந்துள்ளேன் என்பதையே பாலமென நான் முன்னர் குறிப்பிட்டேன். இந்த அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக அண்மைக்கால சரித்திரத்தை உற்றுப் பார்க்கும் போது தமிழ் மக்கள் இன்று வரையில் எவ்வாறு ஏமாற்றப்பட்டு வந்துள்ளார்கள் என்பது புலப்படும்.

வெள்ளையர் காலத்தில் 1920 வரையில் இந் நாட்டின் அரசியல் அரங்கில் கொடிகட்டிப் பறந்த தமிழ்த் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் இருந்து அதிகாரம் இலங்கைக்கு மாறிய போது இருதரப்பாருக்கும் இடையேயான உடன்பாட்டில் பங்கு கொள்ளவில்லை. ஏற்கனவே சேர் பொன்னம்பலம் அருணாசலத்துடன் எழுத்து மூல உடன்படிக்கை வைத்திருந்துங் கூட பதவி தமது கைக்கு வந்ததும் எவ்வாறு பெரும்பான்மைச் சமூகத்தினர் அவரை ஏமாற்றினார்களோ அதே போல் சுதந்திரத்தின் போதும் நடந்தது. அதிகார மாற்றம் பிரித்தானிய குடியேற்ற நாட்டுக்கும் டி.எஸ்.சேனாநாயக தலைமையிலான உயர் குடி சிங்களக் குழுவொன்றின் இடையேயுந்தான் நடைபெற்றது. இருவரும் தமது நல உரித்துக்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

தமிழர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை. அங்கு தான் தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றியதான சிந்தனைகள் கைவிட்டுப் போயின. ஆனால் இந்த உடன்பாட்டின் அடிப்படையில்த் தான் சிங்கள மக்கள் அதிகாரத்தைத் தமது கைகளுக்கு முற்றிலுமாக மாற்றிக் கொண்டார்கள். ஆனால் வெள்ளையர் போனதும் நாங்கள் அதிகாரத்தைப் பகிர்வோம் என்று தமிழ்த் தலைவர்களிடம் கூறியே அதிகார மாற்றத்தைச் செயல்ப்படுத்தினார்கள். எனினும் அதிகாரம் கைக்கு வந்ததும் முற்றிலும் மாறினார்கள்; பெரும்பான்மையினத் தலைவர்கள். இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதே போல்த்தான் அண்மையில் தற்போதைய அரசாங்கமும் எமது தமிழ்த் தலைவர்களை ஏமாற்றியது. 2016ல் அரசியல்த் தீர்வொன்று வரும் என்று எண்ணிய நாம் 2018ல் கூட தீர்வை நோக்கிய வண்ணமே இருக்கின்றோம். கயிறு கொடுத்தலில் சூரர்கள் எங்கள் பெரும்பான்மையின அரசியல்வாதிகள்! கயிறைக் கையில் எடுத்துக் காத்திருப்பவர்கள் தான் தமிழ்த் தலைவர்கள். கயிறைக் கொடுத்து மேலே உங்களை இழுத்துச் செல்வோம் என்பார்கள் கயிறு கொடுப்பவர்கள். கடைசியில் கயிறு மட்டுமே கைக்கு வரும். கை கொடுத்து மேல் எழுப்ப மாட்டார்கள். சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறுபான்மையினரிடம் டி.எஸ்.சேனாநாயக அவர்கள் கோரிய போது அவர் பின்வருமாறான ஒரு உறுதி மொழியை அளித்தார் – ‘இலங்கை தேசிய காங்கிரஸ் சார்பிலும் என் சொந்தச் சார்பிலும் சிறுபான்மையினருக்கு ஒரு உறுதி மொழி அளிக்கின்றேன். சுதந்திர இலங்கையில் எம் பொருட்டு எந்தவிதமான பாதிப்புக்கும் நீங்கள் முகம் கொடுக்க மாட்டீர்கள்’ என்றார்.

இலங்கைத் தமிழர்களிடம் அவர் தனித்துவமாகக் கேட்டார் ‘இலண்டனில் இருந்து நீங்கள் ஆளப்பட விரும்புகின்றீர்களா அல்லது சுதந்திர இலங்கையில் இலங்கையர் என்ற முறையில் எம்முடன் சேர்ந்து ஆள விரும்புகின்றீர்களா?’ என்று. ‘சுதந்திர’ இலங்கையின் முதல் பிரதம மந்திரியாக அதன் பின் பதவி ஏற்ற பின் உடனேயே அவர் செய்த முதற்காரியம் 10 இலட்சம் மலையக மக்களின் உரித்துக்களைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்கியமையே.

பெரும்பான்மைத் தலைமைத்துவம் இன்று வரையில் என்னவாறு நடந்து கொண்டு வருகின்றது என்பது சரித்திரத்தின் மூலமே அறிகின்றோம். அதாவது சுதந்திர காலந்தொடக்கம் இன்று வரையிலான அண்மைய கால சரித்திரத்தின் வாயிலாக அறிகின்றோம். இவை பற்றித் தெரியாவிட்டால் மேலும் மேலும் நாம் ஏமாற்றப்படுவோம். 1975ம் ஆண்டில் அவர் இறக்க சில வருடங்களுக்கு முன் வால்டர் ஷ்வார்ட்ஸ் Walter Shwartz என்றவருக்கு காலஞ்சென்ற தந்தை செல்வா பின்வருமாறு கூறியிருந்தார். ‘நாங்கள் செய்த அடிப்படைத் தவறு பிரித்தானியர் எம்மை விட்டு ஏகும் போது அவர்களிடம் நாம் எமது சுதந்திரத்தைக் கோராமையே’ என்றார். அப்பொழுது நாம் எம்மை வடகிழக்காகப் பிரித்து சிந்திக்காமையே நாம் எமக்கு சுதந்திரம் கேட்காததன் காரணம். அப்போது தெற்கில் இருந்த சிங்களவர்களும் தமிழர்களும் மிக அன்னியோன்யமாகப் பழகி வந்தார்கள்.

1926ல் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இலங்கை திரும்பிய S.W.R.D பண்டாரநாயக்க அவர்கள் இலங்கைக்கு சமஷ்டி முறையே சிறந்தது என்று கூறிய போது அதனை எதிர்த்தது எமது தமிழ்த் தலைவர்கள் தான். பண்டாரநாயக்க அவர்கள் தமிழரும் சிங்களவரும் தத்தமது இடங்களில் இருந்து வாழ்வதே உகந்தது என்று கண்டு சமஷ்டி முறையை முன் வைத்தார். அன்றைய காலகட்டத்தில் கண்டியச் சிங்களவரும் சமஷ்டி முறையையே நாடினார்கள்.

ஒரு வேளை தமிழ் மக்கள் வெள்ளையர் காலத்தில் அதிகம் சலுகை பெற்று தெற்கில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அவர்களை வடகிழக்கிற்கு அனுப்ப இவ்வாறான ஒரு கருத்தை திரு.பண்டாரநாயக்கா அவர்கள் முன்வைத்தாரோ நானறியேன். ஆனால் தமிழர்கள் அந்தக் காலத்தில் வெள்ளையர் ஆட்சியில் தமக்குக் கிடைத்திருந்த நற்சலுகைகளைக் கருத்தில் வைத்து அது தொடர்ந்து தமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் சமஷ்டியை எதிர்த்திருக்கலாம். அப்போது ‘ஈழம்’ என்ற கருத்து தமிழ் மக்களிடையே வேரூன்றியிருக்கவில்லை. ஆனால் இன்று அதே பெரும்பான்மையினச் சமூகம் சமஷ்டி தர முடியாது என்று கூக்குரல் இடுகின்றார்கள்.

என்ன நடந்தது என்று பார்த்தோமானால் சுமார் 1920 வரையில் சிங்கள மக்கள் தம்மைத் தமிழ் அரசியல்த் தலைவர்கள் வழி நடத்திச் செல்வதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாச்சலம், சேர் முத்துக்குமாரசுவாமி போன்ற தலைவர்களை அதுவரையில் ஏற்றிருந்தார்கள். சிங்கள மக்கள் சார்பில் 1915ல் இலண்டன் போய் வந்த இராமநாதனை தேரில் வைத்துத் தாமே இழுத்துப் போனார்கள் பெரும்பான்மையினத் தலைவர்கள். ஆனால் 1920ல் சுயாட்சி தரப்போவதாக பிரித்தானியர் அறிவித்த பின்னர் சிங்களவர்கள் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டதை எம்மவர் காலம் கடந்தே உணர்ந்து கொண்டார்கள். தமது ஆதிக்கம் இனி மும்முரமடைய வேண்டும் என்ற அடிப்படைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பெரும்பான்மையின அரசியல் தலைவர்களால் காய்கள் நகர்த்தப்பட்டன. அப்பொழுதே இந்நாடு பௌத்த சிங்களவருடையது, மற்றவர்கள் எம்மை அண்டி வாழ வேண்டுமே ஒளிய எமது ஆதிக்கத்திற்கு அப்பால்பட்டு வாழ விடக் கூடாது என்ற எண்ணம் உதிக்கத் தொடங்கி விட்டது. அதனால்த்தான் 1930களிலேயே Pan Sinhala எனப்படும் சிங்களவர் மட்டும் அதிகாரம் பெற்ற அரசவை ஆக்கப்பட்டது.

கௌரவ D.S. சேனாநாயக்கவிற்கு அதற்கான அடி எடுத்துக் கொடுத்தது கணிதப் பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் என்று கூறப்படுகிறது. அதே திரு.சி.சுந்தரலிங்கந் தான் ஈழம் கோரிய அடங்காத் தமிழன் என்று பின்னர் அழைக்கப்பட்டார். ஏமாற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றம் அது. முன்னர் சேர் பொன்னம்பலம் அருணாச்சலமும் ஏமாற்றப்பட்டதும் இலங்கைத் தமிழர் பேரவையை தொடக்கியிருந்தார். ஆகவே ஏமாற்றப்பட்ட பின்னர் எமக்கு ஏற்பட்ட பட்டறிவே எமது அரசியலை இன்று வரையில் நிர்ணயித்து வருகின்றது. நாமாக நிர்ணயித்த ஒரு நோக்கை இலக்கை அடைய நாம் முனையவில்லை. ஆனால் அவ்வாறான இலக்கையடைய ஆயுதங்கள் எடுக்கப்பட்டும் இன்று அவை மௌனிக்கப்பட்ட நிலையில் உள்ளன. நாம் தொடர்ந்து பட்டறிவின் பாற்பட்டே காய்களை நகர்த்தி வருகின்றோம்.

அன்று பெரும்பான்மையினத் தலைவர்களிடம் பறிகொடுத்த எமது அதிகாரங்களை இன்றுவரையில் நாங்கள் திரும்பப் பெறவில்லை. வெள்ளையர் இடம் இருந்து சுதந்திரம் பெற சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் சேர்ந்து நடவடிக்கையில் இறங்கியிருப்பினும் வெற்றிக் கம்பத்துக்குக் கிட்ட வருகையில் சிங்களத் தலைவர்கள் எம்மைத் தள்ளிவிட்டு முன்னேறியமையே சரித்திரம். அதன்பின் எம்மை வலுவிழக்கச் செய்ய சிங்களத் தலைவர்களால் நடாத்தப்பட்ட நடவடிக்கைகள் பற்றி இங்கு விரிவாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கின்றேன். 1956ல் ‘சிங்களம் மட்டும்’ சட்டம், 1970 களில் கல்வியில் தரப்படுத்தல் முறை, வடகிழக்கு மாகாணங்களில் வலுவான சிங்களக் குடியேற்றம், பெருவாரியாகத் தமிழ் அரச அலுவலர்களை அரச சேவையை விட்டுச் செல்ல நடவடிக்கைகள் எடுத்தமை, வன்முறைக் கலாச்சரத்தை 1974ம் ஆண்டு அகில உலகத் தமிழ் மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்த போது நடைமுறைப்படுத்தியது என்று பலதையுஞ் சொல்லலாம். அவற்றை விட 1958,1977, 1983ம் ஆண்டுகளிலும் இன்னும் சில வருடங்களிலும் தமிழருக்கு எதிராக நடந்த கலவரங்களையும் குறிப்பிடலாம்.

இன்னும் பல நடவடிக்கைகள் தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் வகையில் நடைபெற்று வந்துள்ளன, வருகின்றன. அவற்றை மாற்றி ஒரு பகுத்தறிவுள்ள அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் ஒன்று கூடி சிந்திக்கவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தினர் கட்சி பேதமில்லாமல் தமது குறிக்கோளில் மிகத் திடமாக இருந்து வருகின்றார்கள். அடுத்து அவர்களின் நகர்வு எவ்வாறு இருக்கும் என்று தெரிந்து கூட அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருக்கின்றோம் நாம். அவர்களோ படிப்படியாகத் தங்கள் குறிக்கோள்களில் முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். இதைக் கூறுவதால்த் தான் நான் என் கட்சியில் வேண்டாதவனாகப் பார்க்கப்படுகின்றேன். ஆனால் உண்மையை அலசிப் பாருங்கள். நீங்கள் சட்ட மாணவ மாணவியர். இது உங்களுக்கு விளங்க வேண்டும்.

ஆயுதமேந்திய எம் இளைஞர்களுக்குப் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டியதில் சிங்களத் தலைவர்கள் வெற்றி கண்டார்கள். பயங்கரவாதம் என்பதற்கும், சட்டப்படி வன் செயல்களாகக் கணிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்று இன்னமும் சரியாக அர்த்தம் தரப்படவில்லை. பொதுவாக பயங்கரவாதம் என்பது நிதி, அரசியல், சமய காரணங்களுக்காக அல்லது வெறுமனே மக்கள் மனதில் பீதியைக் கிளப்ப வேண்டுமென்றே கண்மூடித்தனமாக வன்முறையைப் பாவிப்பதையே குறிக்கின்றது. 1981 தொடக்கம் 1989 வரையில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனல்ட் ரேகன் (Ronald Reagan) காலத்தில்த்தான் பயங்கரவாதம் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றது. அதன் பின்னர் 2001ம் ஆண்டின் செப்ரெம்பர் மாதம் 11ந் திகதிய இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல்களின் பின்னர் குறித்த சொல் பலராலும் பாவிக்கப்பட்டது. தமக்கு வேண்டாதவர்களைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டுவது அரசியல்வாதிகளிடையே பிரசித்தி பெற்றது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சட்டம் வன்முறையில் ஈடுபடுபவரைத் தண்டிக்கின்றது. ஆனால் பயங்கரவாதம் என்றவுடன் தண்டனையானது தரம் கடந்துவிடுகிறது. அரசியல் வெறுப்பு, குரோதம் போன்றவை உட்புகுந்து மரண தண்டனையிலும் பார்க்கக் கொடிய தண்டனையை நிகழ்த்த அது பற்றிய சட்டங்கள் இடமளித்து நிற்கின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகள் கேட்டவன் என்ற முறையில் பயங்கரவாதிகள் என்று நாமம் சூட்டப்படுபவர்களுக்கு நடைபெற்றவற்றை நான் ஓரளவு அறிந்தவன். ஒழுக்க நடத்தைக்கு மாறானது பயங்கரவாதம் என்ற எண்ணம் உலாவிவர அதை மனதிற்கெடுத்து தமிழ் மக்களின் உரிமைகள் கேட்ட போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று அடையாளம் காட்டி, இலங்கைத் தமிழர்களின் பறிக்கப்பட்ட உரிமை பற்றிப் பேசுபவர்கள் யாவரும் பயங்கரவாதிகள் என்று ஒரு வியாக்கியானத்தைக் கொடுத்து தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள் எம் இனத்தவர்களை வேண்டாதவர்கள், வெறுப்பு மிக்கவர்கள், வன்முறையாளர்கள் என்று அடையாளம் காட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளன.

தமிழ் மக்களின் உரித்துக்கள் பற்றிப் பேசினால் அவர் ஒரு பயங்கரவாதி என்று இன்றும் அடையாளப்படுத்தப்படுகின்றார். அல்லது எப்படி ஆயுதமேந்திய பிரபாகரனுடன் என்னை ஒப்பிட்டு என்னையும் பயங்கரவாதி என்கின்றார்கள்? இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் மற்றவருடன் தர்க்கிக்க முடியாவிட்டால் அவன் ஒரு பைத்தியம் என்பார்கள். அப்படித் தான் இந்தப் பயங்கரவாதி என்ற சொல். இப்போ அது ஒரு இழிவான சொல்லாக மாறியுள்ளது. சிங்கள அரசியல்த் தலைவர்கள் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் ரீதியான கோரிக்கைகளை மழுங்கடிக்க இவ்வாறான வார்த்தைகளைப் பாவித்து இவை போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து அவற்றில் வெற்றியும் கண்டு வருகின்றார்கள்.

ஆனால் அண்மைக் காலங்களில் முக்கியமாக போரானது இலங்கையில் முடிவுக்கு வந்த பின், தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களைப் புறக்கணித்து வருவதையும் அரசியல் ரீதியாக அவர்களை அடக்கியாள எத்தனிப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதைச் சர்வதேச சமூகம் கவனிக்கத் தவறவில்லை. ‘புலிகளின் போர் பயங்கரவாதத்தின் எதிரொலி என்றிருந்தோம். ஆனால் இப்பொழுது உண்மையை உணர்கின்றோம். தொடர்ந்து தமிழ் மக்களின் உரித்துக்களைப் புறக்கணித்ததன் காரணமாகத்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது’ என்று கூறி அண்மைய வரலாற்றைப் படித்தறிந்து வருகின்றார்கள் சர்வதேசத்து மனித உரிமையாளர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்றால் அந்தப் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் ஓய்ந்த பின் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு இதுவரையில் அவை செய்யவில்லை. வெறும் கட்டுமாண புனரமைப்பையே அரசாங்கம் மனமுவந்து செய்து வருகின்றது என்ற உண்மையை உலகம் உணரத் தொடங்கியுள்ளது.

வரும் காலத்தில் இந்த செயற்பாடு உக்கிரமாகத் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். ஐ.நா.மனித உரிமை சபையில் ஒன்றிணைந்த பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்துவதிலிருந்து நழுவ எத்தனிப்பது இதுவரை காலமும் தமிழ்த் தலைவர்கள் தொடர் சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்கள் பற்றிக் கூறியதை ருசுப்படுத்துவதாக அமைகின்றது என்ற உண்மை வெளியாகி வருகின்றது. உலக அரங்கில் தொடர் இலங்கை அரசாங்கங்களின் தமிழர்க்கெதிரான நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அரசியல் ரீதியாக ஒருமித்த கோரிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து முன்வைக்காது காலந் தாழ்த்துவது எமக்குப் பாதகமாக அமையப் போகின்றது.

நேற்றைய தினம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நிற்க ஆவல் கொண்டிருக்கும் ஒருவர் பேசியதைப் பத்திரிகையில் பார்த்தேன். வடகிழக்கு மக்கள் பொருளாதார அபிவிருத்தியையே கேட்கின்றார்கள் என்றிருந்தார். அவரின் எண்ணம் தமிழ் மக்கள் போரின் பின்னர் வலு இழந்துள்ளார்கள். படித்தவர்கள், பல்தொழில் விற்பன்னர்கள் எனப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டார்கள். வலு இழந்தவர்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசினால் அவர்கள் அவற்றைக் கவ்விக் கொண்டு தமது உரித்து பற்றி சுதந்திரம் பற்றி, தனித்துவம் பற்றி பேசமாட்டார்கள் என்பதே.

இந்த தொடர் குழப்பநிலையை எமக்கிடையே ஏற்படுத்துவதிலும் சிங்கள அரசியல்த் தலைவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். தனிப்பட்ட சலுகைகளை அரசியல்வாதிகளுக்கு நல்கி அவர்களைத் தம்பால் ஈர்க்க எத்தனித்து இதுவரையில் வெற்றியும் கண்டுள்ளார்கள் என்றே கூற வேண்டியுள்ளது. இதனால்த்தான் தமிழ்ப் பேசும் மக்கள் எங்கிருந்தாலும் தமது பகைமையுணர்வுகளை மூட்டை கட்டிவிட்டு ஒருங்கிணைந்து ஒற்றுமையாக ஒரு பொதுவான அரசியல் தீர்வைக் கோர வேண்டும் என்று கருத்து வெளியிட்டு வருகின்றோம். அந்தப் பொதுவான கோரிக்கை தான் சமஷ்டி அரசாங்கம் என்பது.

சமஷ்டி என்றவுடன் அது பிரிவினை என்று சிங்கள மக்கள் மனதில் பயத்தையும் பீதியையும் நிலை நாட்டியுள்ளார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய புரிந்துணர்வு சிங்களப் பொது மக்களைச் சென்றடையாமையே சமஷ்டியை தொடர்ந்து வரும் பெரும்பான்மை அரசாங்கங்கள் எதிர்ப்பதன் காரணம். தாம் சமஷ்டி பற்றிய உண்மையை மக்களுக்கு உணர்த்தினால் தம்மைத் துரோகிகள் என்று அவர்கள் முடிவு செய்துவிடுவார்களோ என்று கவலைப்படுகின்றார்கள் சிங்கள அரசியல்த் தலைவர்கள். சமஷ்டி பற்றிய பொய் கூறிய சிங்கள அரசியல்த் தலைவர்கள் அது பற்றிய உண்மையைக் கூறத் தயங்குகின்றார்கள். அதற்காகத் தான் ஒன்பது மாகாணங்களுக்கும் சமஷ்டி கேளுங்கள் என்று சிங்களத் தலைவர்களிடம் கோரி வருகின்றேன்.

சில காலத்திற்கு முன்னர் நடந்த ஒன்பது மாகாண முதலமைச்சர்கள் மகாநாட்டில் வடமத்திய மாகாணத்தின் அப்போதைய முதலமைச்சர் பின்வருமாறு ஜனாதிபதி சிறிசேனா அவர்கள் முன் எடுத்துரைத்தார். ‘எமக்கு நூறுவீதம் அதிகாரப் பகிர்வு வேண்டும். ஆனால் சமஷ்டி வேண்டாம்’ என்று அவர் கூறினார். முழுமையான அதிகாரப் பகிர்வு ஒரு சமஷ்டி அரசியல் யாப்பின் கீழ்த் தான் நடைமுறைப்படுத்தலாம் என்பது அவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். சமஷ்டி என்ற சொல் தான் அவருக்கு வேண்டாதிருந்தது. சமஷ்டியின் உள்ளடக்கமும் உள்நோக்கமும் அவருக்கு எந்தவித இடர்பாட்டினையும் கொடுக்கவில்லை.

சமஷ்டி பற்றி தமிழர்களிடையே இரு விதமான எதிர்ப்பாளர்கள் இருக்கின்றார்கள். ஒருசாரார் சமஷ்டி கிடைக்காது; ஆகவே வேறேதேனும் பொறிமுறையை நாங்கள் மாற்றாக உருவாக்க முனைவோம் என்கின்றார்கள். இன்னொருசாரார் ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். இரண்டாம் பிரிவினுள் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்கள் பலர் இடம் பெறுகின்றார்கள். சமூகத்தின் உயர் மட்டச் சிங்களத், தமிழ், முஸ்லிம் தலைவர்களுடன் தாம் மிக நெருக்கமாகப் பழகிவருவதால் அவர்களைக் கொண்டு நாடு பூராகவும் எதனையுந் தாம் செய்விக்கலாம் என்ற ஒரு இறுமாப்பு அவர்களிடையே காணப்படுவதை நான் அவதானித்துள்ளேன். முக்கியமாகச் சில முறையற்ற செயல்த்திட்டங்களை இவ்வாறானவர்கள் மாகாணங்களுக்குக் கொண்டு வரும் போது மாகாண அரசாங்கம் தம் மக்கள் நலம் சார்ந்து எதிர்ப்புத் தெரிவித்தால் ‘பார்த்தீர்களா? இந்தப் பல்லில்லாத 13வது திருத்தச் சட்டத்தின் கீழேயே இவ்வளவு பந்தா காட்டுகின்றார்கள் என்றால் உண்மையான சமஷ்டி கிடைத்தால் என்னவெல்லாம் இவர்கள் சொல்வார்கள்?’ என்று கூறி ஒற்றையாட்சி முறையே சிறந்தது என்கின்றார்கள். அதிகமாக இந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொழும்பில் வாழும் பணம் படைத்த தமிழ் வர்த்தகர்களே.

சமஷ்டி கிடைக்காது என்பதால் சமஷ்டியை வெறுப்பது எமது கையாலாகாத தனத்தைக் காட்டுகின்றது. சமஷ்டி என்ற சொல் சிங்கள மக்களிடையே வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே. ஆனால் அந்த வெறுப்பு சமஷ்டிக்கு எதிரானதல்ல. சமஷ்டியை ஆதரித்தவர்களுக்கு எதிரானது. தமிழர்களை வெறுத்தவர்கள் அவர்கள். தமிழர்கள் சமஷ்டி கேட்டதால் சமஷ்டியையும் வெறுத்தார்கள். சமஷ்டி என்பது ஒரு நாகரீக நவிலல் அல்ல. அது அத்தியாவசியமானது என்பதை இங்கு கூற விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாண பெரும்பான்மை மக்கள் நாட்டின் பெரும்பான்மை மக்களிடமிருந்து மொழியால், கலாசாரத்தால், மதத்தால், வாழ்க்கை முறையால் வேறுபட்டவர்கள். அவர்கள் சர்வதேச சட்டத்தின் ஏற்பாடுகளின்படி ஒரு மனிதக்குழுமம் ஆவார்கள். அவர்களுக்கென்று ஒரு நீண்டசரித்திரம் உண்டு. வேடர்களுட் பட இவ்விரு மாகாண மக்களுமே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண்டில் வழக்குக்கு வரமுன் சிங்களம் பேசியோர் இருக்கவில்லை. ஆகவே வெள்ளையர்கள் நாட்டை 1833ம் ஆண்டில் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கும் போது இருதரப்பட்ட மக்களை அல்லது கண்டிய சிங்களவரையும் தனியாகச் சேர்த்தால் மூன்று விதமான மக்கள் குழுமங்களை இணைத்தார்கள். இன்று பெரும்பான்மையோர் அரசாங்கங்கள் கண்டிய சிங்களவர்களுக்கும் சம அந்தஸ்து அளித்து சிங்கள மக்களை ஒன்றிணைத்துள்ளார்கள். அடுத்து வடகிழக்கைத் தம் வசமாக்க பெற்றுக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் எமது ஒரேயொரு மார்க்கம் என்ன? சமஷ்டியைக் கோரிப் பெறுவது தான் மார்க்கம். சமஷ்டி எம்மை நாமே ஆள வழிவகுக்கும். மத்தியின் உள்ளீடல்கள் குறையும். எமது தனித்துவம் ஓரளவிற்குப் பாதுகாக்கப்படும். இதனால்த்தான் சமஷ்டி வேண்டப்படுகின்றது. ஒற்றையாட்சி முறை எம்மை சிங்கள ஆதிக்கத்தினுள் ஆழ்த்திவிடும். ஆதிக்கத்தினுள் அமிழ்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் மொழி, மதம், கலாசாரம் போன்ற பலவற்றாலும் எம்மைத் தம்மோடு இணையச் செய்துவிடுவார்கள். வெறும் பொருளாதார நன்மைகளைப் பெற்று எமது தனித்துவத்தை நாம் இழக்க வேண்டுமா என்பதை நீங்களே நிர்ணயிக்க வேண்டும்.

அன்றைய சிங்கள மக்கட் தலைவர்களின் குறிக்கோள்களையே இன்றைய சிங்கள மக்கட் தலைவர்களும் கடைப் பிடித்து வருகின்றார்கள். ஆனால் நாம் விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளோம். விட்டுக் கொடுத்தால் நாம் பௌத்த சிங்களவராகவோ பௌத்த தமிழர்களாகவோ மாறிவிட வாய்ப்பிருக்கின்றது.

ஏற்கனவே எமது வடமாகாண சபை ஒக்டோபரில் கலைக்கப்பட்டதும் வடமாகாண ஆளுநர் அடுத்த தேர்தல் வரமுன் அவர் எதனைச் செய்ய வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அறிகின்றேன். அவர்கள் செய்யவிருப்பதில் ஒன்று கிளிநொச்சியில் பௌத்த விகாரையொன்றைத் திறந்து வைப்பது. கிளிநொச்சியை பௌத்தர்கள் வாழும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பௌத்தர்கள் என்றால் சிங்களவரே என்ற தப்பபிப்பிராயம் பரப்பப்பட்டு வருகின்றது.

ஆகவே இன்றைய நிலையில் நாம் உலக நாடுகளுக்கு உண்மையை உணர்த்த வேண்டும்.சிங்கள மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும். சமஷ்டி ஒன்றே எம்மை ஒருமித்து இந் நாட்டில் வாழ வைக்கும் என்ற உண்மையை சிங்கள மக்களுக்கு உணர்த்த வேண்டும். சமஷ்டி கிடைத்தால் அடுத்த நாளே வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைந்து இதர மாகாணங்களுடன் சேர்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்ப முடியும் என்ற உண்மையைப் பரப்ப வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!