இராணுவப் புலனாய்வு தலைமையகத்தில் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல்!

அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணையில், கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை தலைமையகத்துக்கு சொந்தமாக 36 துப்பாக்கிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
 
அஹுங்கல்ல – மித்தரமுல்ல பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி இரவு உந்துருளியில் பயணித்த நபர் ஒருவர் மீது மற்றுமொரு உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், குறித்த உந்துருளியில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வருகைதந்த உந்துருளி கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை முகாமுக்கு அருகில் உள்ள புதரொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி காவல்துறையின் மோப்ப நாயைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. அதன்போது, குறித்த மோப்ப நாய் இரண்டு தடவைகள் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்றதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட அஹுங்கல்ல காவல்துறையினர், குறித்த திகதியில் கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து கடமைக்காக வழங்கப்பட்ட T-56 ரகத்தைச் சேர்ந்த 36 துப்பாக்கிகளை கைப்பற்றியுள்ளனர். எனினும், கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!