சட்டமா அதிபரை சாட்சியாக அழைப்பது சட்டத்தை மீறும் செயல்! – ரிஐடிக்கு பதிலடி.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தன்னை அழைப்பதற்கு எதிராக ஏழு பக்க ஆட்சேபனை கடிதத்தை முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, நேற்று தனது கனிஷ்ட சட்டத்தரணி ஊடாக சமர்ப்பித்தார்.
    
முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பயங்கரவாத புலனாய்வு பிரிவில் (ரிஐடி) ஆஜராகவில்லை என்பதுடன், அவருடைய கனிஷ்ட சட்டத்தரணி திமித்ர அபேசேகர ஆட்சேபனைக் கடிதத்தை ரிஐடி பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸிடம் கையளித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் ஒருவரை சாட்சியாக அழைப்பது சட்டத்தை மீறும் செயலாகும் என்று 12 விடயங்களை மேற்கோள் காட்டி குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் பாரிய சதித்திட்டமொன்று காணப்படுவதாக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற விதம், நேரம், தினம் மற்றும் ஏனைய விடயங்கள் அரச புலனாய்வுச் சேவைக்கு கிடைத்தமையின் ஊடாக பாரிய சதித்திட்டமொன்று இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கின்றமை வௌிப்படுவதாக அவர் கூறியிருந்தார். இந்த பாரிய சதித்திட்டத்துடன் தொடர்புடைய அனைவரும் சாட்சியங்களின் ஊடாக வௌிப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முன்னாள் சட்டமா அதிபரின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!