பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது

அரசாங்கத்தினால் முன்மொழிவு பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.
சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குழு ஒன்றை நியமித்திருந்தது.

இந்தக் குழு முன்னெடுத்த ஆய்வுகளின் மூலம் குறித்த விடயம் தெரிய வந்துள்ளது.
சிரேஷ்ட சட்ட நிபுணர்களினால் இந்த சட்ட முன்மொழிவு குறித்த ஆவணம் ஆராயப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் , 4, 10, 11, 13, 14, 15, 16, 28, 30, 31, 36, 82, 83, 84, 85, மற்றும் 86 சரத்துக்கள் அரசியல் அமைப்பின் பிரகாரம் அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக அரசியல் சாசனத்தின் 13 ஆம் சரத்தின் அடிப்படையில் கருத்து சுதந்திரம், சுதந்திரமாக ஒன்று கூறுதல் போன்ற அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கு தெளிவுபடுத்த உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சட்டமூலம் ஏற்கனவே நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமூலத்திற்கு எதிராக சட்டரீதியாக சவால் விடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!