கறுப்புப் பட்டியலில் கரன்னகொட- பயணத் தடை விதித்தது அமெரிக்கா!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவிற்கு அமெரிக்கா பயணதடை விதித்துள்ளது . அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
    
இலங்கை கடற்படையின் தளபதியாக பதவிவகித்த காலத்தில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுடன் இலங்கையின் வடமேல் மாகாணத்தின் தற்போதைய ஆளுநராக உள்ள வசந்த கரன்னகொடவிற்கு உள்ள தொடர்புகள் காரணமாக வெளிநாட்டுச் செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய ஒதுக்கீட்டுச்சட்டம் 2023 இன் பிரிவு 7031 இன் கீழ் வசந்த கரன்னகொடவை இந்த பட்டியலில் சேர்ப்பதாக இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் வசந்த கரண்னகொடவும் அவரது மனைவி ஸ்ரீமதி அசோக கரன்னகொடவும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

வசந்த கரன்னகொட பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என அரசசார்பற்ற அமைப்புகளும் சுயாதீன விசாரணையாளர்களும் பதிவு செய்த குற்றச்சாட்டுகள் நம்பகதன்மை வாய்ந்தவை பாரதூரமானவை என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகளை நிலைநிறுத்துதல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டு வருதல், பாதிக்கப்பட்டவர்கள் தப்பியவர்களின் துயரங்களை அங்கீகரித்தல், இலங்கையில் குற்றமிழைத்தவர்களிற்கு எதிராக பொறுப்புக்கூறப்படுதல் போன்றவை குறித்த தனது அர்ப்பணிப்பை அமெரிக்கா மீள வலியுறுத்துகின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!