கருணாநிதி நூற்றாண்டு விழா: ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்!

சென்னை மாநகரில் தென்சென்னை வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தாலும், அங்கு அரசு பொது மருத்துவமனை இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, கிண்டியில் 51 ஆயிரத்து 429 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.230 கோடி மதிப்பீட்டில், 7 மாடியுடன் 1000 படுக்கை வசதிகளை கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.
    
இந்த மருத்துவமனையில் இருதயம், நெஞ்சக அறுவை சிகிச்சை துறை, மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, ரத்த நாள அறுவை சிகிச்சை துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை போன்ற உயர் சிறப்பு பிரிவுகள் அமைய உள்ளது. தென்சென்னை பகுதியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனையை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார்.

ஜனாதிபதியை அழைக்க ஏற்பாடு இந்த ஆண்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவும் வருவதால், பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைத்து திறப்பு விழாவை மேற்கொள்ள ஏற்பாடு நடந்தது. ஜனாதிபதியை சந்திக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டிருந்த நிலையில், நேற்று காலை 11.20 மணிக்கு நேரம் ஒதுக்கிக்கொடுக்கப்பட்டிருந்தது.

இதற்காக, நேற்று முன்தினம் இரவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிட்டு, சென்னை விமான நிலையமும் சென்றார். ஆனால், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டது. மு.க.ஸ்டாலின் சந்திப்பு இதனால், தனது பயணத்தை மாற்றியமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி விமான நிலையத்தில் அவரை எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு, தமிழ்நாடு இல்லம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அங்கு ஓய்வெடுத்துவிட்டு, பகல் 11.20 மணிக்கு ஜனாதிபதி மாளிகை சென்ற அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்துவைக்குமாறும், கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்ததுடன், அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.

ஜனாதிபதி உறுதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவும் வருகிற ஜூன் 5-ந்தேதியன்று சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க வருவதாக உறுதி அளித்தார். அதன்படி, ஜூன் 5-ந்தேதி கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்துவைக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!