நாம் ஒருபோதும் விலகி நிற்கவில்லை- ஜனாதிபதிக்கு சுமந்திரன் பதிலடி!

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது குறித்து அண்மையகாலங்களில் ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக்கூட்டங்களிலும் நாம் பங்கேற்றிருப்பதுடன், அதனை முன்னிறுத்திய ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருக்கின்றோம். எனவே இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் நாம் ஒருபோதும் தூரவிலகி நிற்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்கும் விடயத்தில் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அதனைச் செய்வதாக வெறுமனே கூறுவதைவிடுத்து, அதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி உடனடியாக எடுக்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும். இனப்பிரச்சினை விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் தூரமாகிச்செல்வதால் எந்தப் பயனுமில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமாயின், அனைத்துத்தரப்பினரும் பாராளுமன்றத்துக்குள்ளே ஒரே அரசாங்கமாகச் செயற்படவேண்டும் என்று நேற்று முன்தினம் ஐக்கிய தேசியக்கட்சியின் மேதினக்கூட்டத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 75 ஆவது சுதந்திரதினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாகக்கூறி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த டிசம்பர், ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடாத்தப்பட்ட சர்வகட்சிக்கூட்டம் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுடனான கூட்டங்கள் அனைத்திலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பங்கேற்றிருந்த நிலையில், ஜனாதிபதியின் தற்போதைய கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று வினவியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்துப் பேசுவதற்கு கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனக்கு அழைப்புவிடுத்தபோதே தான் அதற்கு இணங்கியதாகவும், அதனைத்தொடர்ந்து டிசம்பர் 10 ஆம் திகதி வரவு, செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்த பின்னர் மறுநாள் 11 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வகட்சிக்கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய சுமந்திரன், ‘அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் நாம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக நாம் ஒத்துழைப்பு வழங்காததன் விளைவாகவே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியவில்லை என்று எம்மீது பழிசுமத்திவிடக்கூடாது என்ற காரணத்தினாலேயே இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றோம் என்று நாம் அப்போதே பகிரங்கமாக அறிவித்திருந்தோம்’ என்றும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதத்தில் இரு கூட்டங்கள், ஜனவரி மாதத்தில் இரு கூட்டங்களென இவ்விவகாரம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்துக் கூட்டங்களிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கலந்துகொண்டிருந்ததாகவும், இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் கையளித்ததாகவும் குறிப்பிட்ட கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர், கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப்பிரகடன உரையில் தமது முன்மொழிவுகள் உள்ளடங்கியிருந்ததாகவும் அவற்றை நிறைவேற்றுவதாக அவர் உறுதியளித்ததாகவும் கூறினார்.

இருப்பினும் அவை இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தாம் ஒருபோதும் தூரவிலகி நிற்கவில்லை எனவும், மாறாக ஆக்கபூர்வமான அனைத்து யோசனைகளையும் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய சுமந்திரன், தம்மீது இத்தகைய பழி சுமத்தப்படக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தமையினாலேயே அதனைப் பகிரங்கமாகவே அறிவித்து, அனைத்துக் கூட்டங்களிலும் கலந்துகொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் ‘இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையில் தீர்வுகாணமுடியாது. மாறாக சகல மக்களும் சமத்துவமான முறையில் நடாத்தப்படும் அதேவேளை, தமது வாழ்விடங்களில் தமது அதிகாரங்களைப் பிரயோகிக்கக்கூடிய வாய்ப்பை மக்களுக்கு வழங்கக்கூடியவகையிலான தீர்வையே நாம் எதிர்பார்க்கின்றோம். நாம் விரும்பும் தீர்வு என்னவென்பதை ஜனாதிபதி நன்கறிவார்.

எனவே வெறுமனே ‘செய்வோம், செய்வோம்’ என்று கூறுவதில் பயனில்லை. மாறாக உரிய தீர்வை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று வலியுறுத்திய சுமந்திரன், இவ்விவகாரத்தைப் பொறுத்தமட்டில் தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொண்டு ஆதரவு வழங்கவேண்டும் என்ற அவசியமில்லை என்றும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்டதன் பின்னரேயே தாம் மத்திய அரசாங்கத்தில் எத்தகைய வகிபாகத்துடன் செயற்படமுடியும் என்பதைத் தீர்மானிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!